இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என வென்று கோப்பையை கைப்பற்றியது. வில்லியம்சன் 108 ரன்கள் விளாசினார்.
ஹாமில்டனில் நடைபெற்ற இந்த டெஸ்டில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 80.1 ஓவரில் 292 ரன்களும், நியூஸிலாந்து 79.4 ஓவரில் 237 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 55 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை ஷாட் பிட்ச் பந்தில் திணறியதால் 36.3 ஓவரில் வெறும் 133 ரன்களுக்கு சுருண்டது. குசால் மெண்டிஸ் 46, கருணாரத்னே 27 ரன் எடுத்தனர். நியூஸி. தரப்பில் டிம் சவுதி 4, வாக்னர் 3 விக்கெட் கைப்பற்றினர்.
189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து 3வது நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. லதாம் 4, குப்தில் 1, ராஸ் டெய்லர் 35, மெக்கலம் 18, ஷான்டர் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். துஷ்மந்தா ஷமீரா 4, சுரங்கா லக்மல் 1 விக்கெட் கைப்பற்றினர்.
வில்லியம்சன் 78, வாட்லிங் ரன் எதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். கைவசம் 5 விக்கெட்டுகள் இருக்க வெற்றிக்கு 47 ரன்கள் தேவை என்ற நிலையில் நேற்று 4வது நாள் ஆட்டத்தை நியூஸிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. 152 பந்தில், 12 பவுண்டரி, 1 சிக்ஸருடன் வில்லியம்சன் சதம் அடித்தார். சர்வதேச போட்டிகளில் இது அவருக்கு 13வது சதமாக அமைந்தது.
வில்லியம்சனின் பொறுப்பான ஆட்டத்தால் நியூஸிலாந்து அணி 54.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வில்லியம்சன் 108, வாட்லிங் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியால் நியூஸிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என வென்று கோப்பையை கைப்பற்றியது. முதல் டெஸ்டில் நியூஸி. 122 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் நியூஸி லாந்து அணி தனது சொந்த மண்ணில் ஏற்கெனவே நிகழ்த்திய சாதனையை சமன் செய்தது. நியூஸி லாந்து அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 13 டெஸ்டுகளில் தோல்வியை சந்திக்கவில்லை. இதில் 7 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. 6 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தது. அந்த அணி 1987-1991ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 13 டெஸ்ட்களில் (3 வெற்றி, 10 டிரா) தோல்வியை சந்திக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வில்லியம்சன் நம்பர் ஒன்
நியூஸிலாந்தின் வில்லியம்சன் நேற்றைய ஆட்டத்தின் போது 108 ரன்கள் விளாசினார். அவர் இந்த ஆண்டில் மட்டும் 5 சதங்களுடன் 1,172 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் நியூஸிலாந்து வீரர்களில் ஓராண்டில் அதிக ரன்கள் குவித்திருந்த மெக்கலமின் (1,164 ரன்) சாதனையை முறியடித்தார். சர்வதேச ஒருநாள் போட்டி, டி 20, டெஸ்ட் ஆகியவற்றில் இந்த ஆண்டில் மட்டும் வில்லியம்சன் 2,633 ரன்கள் குவித்துள்ளார். இதற்கிடையே ஐசிசியின் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட்டை பின்னுக்குத் தள்ளி வில்லியம்சன் முதலிடத்தை பிடித்தார்.