ஐரோப்பிய கால்பந்து போட்டி, தற்போது ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய கால்பந்து போட்டியைப் பற்றி சில தகவல்களைத் தெரிந்துகொள்வோம்:
‘யூரோ கால்பந்து போட்டி’ என்று அழைக்கப்படும் ஐரோப்பிய கால்பந்து போட்டி, 1960-ம் ஆண்டுமுதல் நடத்தப்பட்டு வருகிறது. முதலாவது ஐரோப்பிய கோப்பையை, அப்போதைய சோவியத் யூனியன் வென்றது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இப்போட்டியில் ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் பங்கேற்கின்றன. பொதுவாக ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு நாட்டில் மட்டும்தான் ஐரோப்பிய கால்பந்து போட்டி நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டில் 12 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நகரங்களில் இப்போட்டி நடத்தப்படுகிறது.
ஐரோப்பிய கால்பந்து போட்டியை நடத்துவதற்கான யோசனையை முதலில் வெளியிட்டவர், 1950-களில் ஐரோப்பிய கால்பந்து சங்கத்தின் செயலாளராக இருந்த ஹென்ரி டெலானி. அதனால் ஐரோப்பிய கால்பந்து போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு வழங்கப்படும் கோப்பை, ‘ஹென்ரி டெலானி கோப்பை’ என்று அழைக்கப்படுகிறது. 8 கிலோ எடைகொண்ட இந்தக் கோப்பை 60 சென்டிமீட்டர் உயரம் கொண்டது.
ஐரோப்பிய கால்பந்து போட்டியில் இதுவரை அதிகபட்சமாக ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளன. பிரான்ஸ் அணி, 2 முறை ஐரோப்பிய சாம்பியனாகி உள்ளது. ஐரோப்பிய கால்பந்து போட்டியில், அதிக ஆட்டங்களில் ஆடியவர் என்ற பெருமை போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு உள்ளது. அவர் கடந்த 2016-ம் ஆண்டுவரை 21 ஆட்டங்களில் ஆடியுள்ளார். ஐரோப்பிய கால்பந்து போட்டியில் 1960-ம் ஆண்டு முதல் ஆடிவரும் இங்கிலாந்து அணி, இதுவரை ஒருமுறைகூட சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதில்லை.