விளையாட்டு

நியூஸிலாந்து அணியின் தாக்குதல் கோலிக்குப் பிரச்சினையாக இருக்கும்: பார்த்தீவ் படேல்

ஐஏஎன்எஸ்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 2018 ஆம் ஆண்டைப் போல பாவித்து மீண்டும் சதமடிக்க ஆரம்பிக்க வேண்டும், ஆனால் பல பரிமாணங்கள் இருக்கும் நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு எதிராக அது அவ்வளவு எளிதல்ல என்று இந்திய அணியின் முன்னாள் விக்கெட்கீப்பர் பார்த்தீவ் படேல் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை அன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் நியூஸிலாந்தும் மோதுகின்றன. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் பதிப்பில் நடக்கும் முதல் இறுதிப் போட்டி இது. ஏற்கெனவே நியூஸிலாந்து அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் ஆடி வருவதன் மூலம் இதற்கான பயிற்சியைப் பெற்று வருகிறது. இந்திய வீரர்களும் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்று தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து தனியார் தொலைக்காட்சியில் பேசியிருக்கும் பார்த்தீவ் படேல், "கோலி சற்று நிதானித்து, 2018ல் சில சதங்கள் அடித்த சமயத்தில் எப்படி ஆடினார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். (இங்கிலாந்தில் 10 இன்னின்ஸிலில் 134 ரன்கள் மட்டுமே அடித்த ) 2014ஆம் ஆண்டை விட இப்போது கோலி இன்னும் பயிற்சி பெற்று தயாராக இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

ஆனால் அவருக்கு சவால்கள் காத்திருக்கின்றன. பல வேகப்பந்து வீச்சாளர்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஏனென்றால் நியூஸி. அணி ஒரே மாதிரியாகப் பந்து வீசும் அணி அல்ல" என்று கூறியுள்ளார்.

2020ஆம் ஆண்டு கோலி ஒரு சர்வதேச சதத்தையும் அடிக்கவில்லை. 12 வருடங்களில் அவர் சதமடிக்காமல் போனது இதுவே முதல் முறை. ஆனால் 2020ஆம் ஆண்டு அவர் வெறும் 22 சர்வதேச போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தார். கோவிட் நெருக்கடியால் கிட்டத்தட்ட 9 மாதங்கள் இந்திய அணி எந்தப் போட்டியிலும் ஆடவில்லை. 2019ஆம் ஆண்டு கோலி 7 சர்வதேச சதங்களையும், 2018ஆம் ஆண்டு 11 சதங்களையும் அடித்திருந்தார்.

SCROLL FOR NEXT