சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் நடப்பு சாம்பியனான ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவுடன் விளையாட வேண்டும். அதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என குரேஷியாவின் போர்னா கோரிச் தெரிவித்துள்ளார்.
தெற்கு ஆசியாவில் நடை பெறும் ஒரே ஏடிபி போட்டி யான சென்னை ஓபனில், 19 வய தான போர்னா கோரிச் 2-வது ஆண் டாக பங்கேற்க உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
2015-ல் முதல்முறையாக சென்னை ஓபனில் பங்கேற்றேன். இங்கு கிடைக்கும் ரசிகர்களின் ஆதரவு அமோகமானது. கடந்த முறை 2-வது சுற்றில் வாவ்ரிங்காவிடம் நேர்செட்டில் தோல்வியடைந்தேன். இந்த முறை நான், அவரை இறுதிச்சுற்றில் சந்திக்க விரும்புகிறேன். மேலும் முன்னணி வீரர்களுடன் விளையாட விரும்புகிறேன்.
அவர்கள் தான் எனது சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருகிறார்கள். அமெரிக்க ஓபனில் ரபேல் நடாலுடன் மோதிய ஆட்டத்தை ரசித்து விளையாடினேன். அந்த ஆட்டத்தில் நான் தோற்றபோதும் அங்கு நிலவிய சூழல் என்னை கவர்ந்தது. மேலும் நடாலிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். அது என்னை சிறந்த வீரராக உருவாக்கியுள்ளது. எனது ஆட்டத்திறனை மேலும் வலுப்படுத்த வேண்டியதுள்ளது. இதற்காக கடினமாக பயிற்சி செய்து வருகிறேன். அடுத்த இரு ஆண்டுகளுக்கு சென்னை ஓபனில் பட்டம் வெல்ல விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆண்டின் தொடக்கத்தில் தர வரிசைப்பட்டியலில் 95வது இடத் தில் இருந்த போர்னா கோரிச் கடந்த ஜூலை மாதம் 33வது இடத்துக்கு முன்னேறினார். ஆனால் ஆண்டு இறுதியில் 44வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.