விளையாட்டு

விஜய் ஹஸாரே ஒருநாள் போட்டி: தமிழகம் உள்ளிட்ட 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி

செய்திப்பிரிவு

விஜய் ஹஸாரே ஒருநாள் போட்டி தொடரில் தமிழகம், பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

விஜய் ஹஸாரே ஒருநாள் போட்டி தொடரில் நேற்று கடைசி லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. ஏ பிரிவில் இடம் பெற்ற தமிழகம், ராஜஸ்தானுடன் மோதியது. முதலில் ஆடிய தமிழகம் 7 விக்கெட் இழப்புக்கு 384 ரன்கள் குவித்தது. பாபா அபராஜித் 122 பந்தில், 13 பவுண்டரிகளுடன் 137 ரன்னும், தினேஷ் கார்த்திக் 97 பந்தில், 12 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 108 ரன்னும் விளாசினர்.

காலிறுதியில் தமிழகம்

தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் 26.2 ஓவரில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் தமிழக அணி 252 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷா 6 விக்கெட் கைப்பற்றினார். தமிழக அணி 6 லீக் ஆட்டத்தில் 5 வெற்றிகளுடன் காலிறுதிக்கு முன்னேறியது.

யுவராஜ்சிங் 98 ரன்

ஏ பிரிவில் இருந்து மற்றொரு அணியாக பஞ்சாப் காலிறுதிக்கு தகுதி பெற்றது. அந்த அணி கடைசி ஆட்டத்தில் சர்வீசஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் ஆடிய சர்வீசஸ் 7 விக்கெட் இழப்புக்கு 323 ரன் எடுத்தது. வெர்மா 113, ஸ்வாயின் 101 ரன் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய பஞ்சாப் 49 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 325 ரன் எடுத்து வெற்றி பெற்றது. யுவராஜ்சிங் 83 பந்தில், 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 98 ரன் விளாசினார்.

இமாச்சல் பிரதேசம் வெற்றி

டி பிரிவில் உள்ள இமாச்சல் பிரதேசம் தனது கடைசி லீக் ஆட்டத்தில் மத்திய பிரதேச அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து காலிறுதியில் கால்பதித்தது. முதலில் பேட் செய்த இமாச்சல் பிரதேசம் 5 விக்கெட் இழப்புக்கு 295 ரன் குவித்தது. ரிஷி தவண் 117 ரன் விளாசினார். தொடர்ந்து ஆடிய மத்திய பிரதேசம் 46.1 ஓவரில் 254 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த பிரிவில் இருந்து உத்தர பிரதேசம் மற்றொரு அணியாக காலிறுதியில் நுழைந்துள்ளது.

உன்முகுந்த் சதம்

சி பிரிவில் ஆந்திராவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது. முதலில் பேட் செய்த ஆந்திரா 49.2 ஓவரில் 183 ரன்களுக்கு சுருண்டது. சிவகுமார் 38 ரன் எடுத்தார். டெல்லி தரப்பில் பவன் நெகி 3 விக்கெட் கைப்பற்றினார். தொடர்ந்து ஆடிய டெல்லி 34.1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக் 184 ரன் எடுத்து வெற்றி பெற்றது. உன்முகுந்த் சந்த் 118 ரன்கள் விளாசினார். காம்பீர் 30. ஹிம்மாட் சிங் 29 ரன் எடுத்தனர். இந்த பிரிவில் இருந்து மற்றொரு அணியாக விதர்பா காலிறுதிக்கு தகுதி பெற்றது. அந்த அணி கடைசி ஆட்டத்தில் மகாராஷ்டிராவை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

கர்நாடகா வெளியேறியது

பி பிரிவில் நடப்பு சாம்பியனான கர்நாடகா தனது கடைசி ஆட்டத்தில் 207 ரன்கள் வித்தியாசத்தில் ஜம்மு&காஷ்மீர் அணியை வென்றது. எனினும் அந்த பி பிரிவில் இருந்து அந்த அணியால் காலிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது. இந்த பிரிவில் இருந்து ஜார்கண்ட், குஜராத் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

குஜராத் தனது கடைசி ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கேரளாவை தோற்கடித்தது. முதலில் பேட் செய்த கேரளா 43.2 ஓவரில் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சச்சின் பேபி 41 ரன் எடுத்தார். தொடர்ந்து ஆடிய குஜராத் 32.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 103 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

SCROLL FOR NEXT