19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் வரும் ஜனவரி மாதம் 27ம் தேதி முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை வங்கதேசத்தில் நடைபெறுகிறது. இதற்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. மொத்தம் 16 அணிகள் கலந்துகொள்கிறது. இவை நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், ஸ்காட்லாந்து, நமீபியா அணிகளும், பி பிரிவில் பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், கனடா ஆகிய அணிகளும் சி பிரிவில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே, பிஜி அணிகளும் டி பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. 19 நாட்கள் நடைபெறும் தொடரின் முதல் ஆட்டத்தில் 27ம் தேதி நடப்பு சாம்பியன் தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இறுதிப்போட்டி பிப்ரவரி 14ம் தேதி மிர்பூரில் நடைபெறுகிறது.
டி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் 28ம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. 2வது ஆட்டத்தில் 30ம் தேதி நியூஸிலாந்தையும், கடை லீக் ஆட்டத்தில் பிப்ரவரி 1ம் தேதி நேபாளத்தையும் சந்திக்கிறது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பையில் இந்திய அணி 2000, 2008, 2012ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.