ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு இன்று மாலை டெல்லியில் நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்க தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜா, காயத்தில் இருந்து மீண்டுள்ள முகமது ஷமி ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இரு அணிகளும் 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகின்றன. ஒருநாள் போட்டி தொடர் ஜனவரி 12ம் தேதியும், டி 20 தொடர் ஜனவரி 26ம் தேதி தொடங்குகிறது.
இந்த தொடருக்கான இந்திய வீரர்கள் தேர்வு இன்று மாலை டெல்லியில் நடைபெறுகிறது. சந்தீப்பாட்டில் தலைமையிலான தேர்வுக்குழு உறுப்பினர்கள் இந்திய அணியை தேர்வு செய்கின்றனர். இந்நிலையில் இந்த தொடருக்கான அணியில் ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி ஆகியோர் இடம் பெறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
27 வயதான ரவீந்திர ஜடேஜா, தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், பேட்டிங்கில் 109 ரன்னும் சேர்த்தார். இதனால் அவர் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அணியில் இணையக்கூடும். அவர் இடம்பெறும் பட்சத்தில் அக்ஸர் படடேலுக்கு இடம் சந்தேகம் தான்.
வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, கணுக்காலில் ஏற்பட்ட காயத்திற்காக உலககோப்பைக்கு பின்னர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். தற்போது உடல் தகுதியுடன் உள்ள அவர் விஜய் ஹஸாரே ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறார். இந்த தொடரில் அவர் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை என்றாலும் முன்னணி வீரரான அவர் மீண்டும் அணிக்கு திரும்ப உள்ளார். இதேபோல் இஷாந்த் சர்மாவுக்கும் வாய்ப்பு கிடைக்கக்கூடும் என கூறப்படுகிறது.
சமீபகாலமாக ஷிகர் தவண், அம்பட்டி ராயுடு, ஸ்டூவர்ட் பின்னி, ரெய்னா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் அவர்கள் தொடர்ந்து அணியில் நீடிப்பார்களா என்பது தெரியவில்லை. அதேவேளையில் முரளி விஜய் பெயர் பரிசீலிக்கப்படக்கூடும்.
தோனியே மீண்டும் கேப்டனாக தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. உலககோப்பை டி 20 தொடரை கருத்தில் கொண்டு தற்போது ஆடி வரும் 12 வீரர்கள் அப்படியே இடம் பெற வாய்ப்புள்ளது. 16 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டால் குர்கீரத்சிங் மான் இடம் பெறலாம்.
இன்று அறிவிக்கப்படும் அணி யில் 5 வேகப்பந்து வீச்சாளர்கள், 3 சுழற்பந்து வீச்சாளர்கள், 6 அல்லது 7 பேட்ஸ்மேன்கள், ஒரு ஆல்ரவுண்டர் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்ஸ்மேன்களில் ஷிகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி, தோனி, ரெய்னா, அஜிங்க்ய ரஹானே ஆகியோர் இடம் பெறுவார்கள்.
அஸ்வின், ரவீந்திர ஜடேஜா முதன்மை சுழற்பந்து வீச்சாளர் களாக இடம்பெறுவார்கள். 3வது சுழற்பந்து வீச்சாளருக்கான இடத்துக்கு ஹர்பஜன்சிங், அக்ஸர் படடேல், அமித் மிஸ்ரா இடையே போட்டி இருக்கும். வேகப்பந்து வீச்சில் முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், மோகித் சர்மா, வருண் ஆரோன் ஆகியோரில் 5 பேர் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.