இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் தன்னைப் பற்றிச் சொன்ன கருத்துக்கு, 'அந்நியன்' திரைப்படத்திலிருந்து ஒரு மீமை வைத்து பதில் சொல்லிக் கிண்டல் செய்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
முன்னதாக, இணையதளம் ஒன்றுக்கு சஞ்சய் மஞ்சரேக்கர் பேட்டி அளித்திருந்தார். இதில் ரவிச்சந்திரன் அஸ்வினை கிரிக்கெட் உலகின் சிறப்பு வாய்ந்த பந்துவீச்சாளராகத் தான் கருதவில்லை என்றும், அதற்குக் காரணம், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அஸ்வின் இதுவரை ஒரு முறை கூட ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்பதே காரணம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், "அவர் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான இந்தியக் களங்களில்தான் எதிரணிகளைத் திணறடித்துள்ளார். அதே வேளையில் இந்த நான்கு வருடங்களில் ரவீந்திர ஜடேஜா, அஸ்வினுக்கு நிகராக விக்கெட்டுகள் எடுத்துள்ளார். கடந்த இங்கிலாந்து தொடரில், அஸ்வினை விட அக்ஸர் படேல் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதனால்தான் அஸ்வினை கிரிக்கெட் உலகின் என்றும் சிறப்பு வாய்ந்த பந்துவீச்சாளராக என்னால் பாராட்ட முடியவில்லை" என்று மஞ்சரேக்கர் கூறியுள்ளார்.
மஞ்சரேக்கரின் கருத்துக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலர் பதில் கருத்து தெரிவித்தனர். சிலர் கடுமையாக விமர்சித்தனர். 78 டெஸ்ட் போட்டிகளில் 409 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் அஸ்வின், 30 முறை ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மஞ்சரேக்கரின் கருத்துகளை ரீட்வீட் செய்திருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், பதிலுக்கு, நக்கலாக, 'அந்நியன்' படத்தில் விக்ரம் கதாபாத்திரம் விவேக் கதாபாத்திரத்திடம் பேசும், "அப்படி சொல்லாதடா சாரி, மனசெல்லாம் வலிக்கறது" என்கிற வசனத்துடன் கூடிய மீமை ஷேர் செய்து வாய்விட்டுச் சிரிக்கும் ஸ்மைலிகளையும் பகிர்ந்துள்ளார்.