விளையாட்டு

4-வது விக்கெட்டுக்காக 449 ரன்கள்: வோஜஸ், ஷான் மார்ஷ் புதிய டெஸ்ட் சாதனை

இரா.முத்துக்குமார்

ஹோபார்ட்டில் காய்ந்து வரும் மே.இ.தீவுகளுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீர்ர்களான ஆடம் வோஜஸ் (269 நாட் அவுட்), ஷான் மார்ஷ் (182) இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 449 ரன்களைச் சேர்த்து புதிய டெஸ்ட் சாதனை படைத்துள்ளனர்.

அதாவது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 4-வது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்து அதிகபட்சமாக சேர்க்கப்பட்ட ரன்கள் இதுவே. இதற்கு முன்பாக கராச்சியில் 2009-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஜெயவர்தனே, சமரவீரா ஆகியோர் 4-வது விக்கெட்டுக்காக சேர்த்த 437 ரன்கள் சாதனையை வோஜஸ், மார்ஷ் உடைத்தனர்.

ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஜோடி சேர்ந்து அதிக ரன்களைச் சேர்த்த வகையில் உலக சாதனையை வைத்திருப்பவர்கள் இலங்கை வீரர்களான சங்கக்காரா-ஜெயவர்தனே ஜோடியாகும், இவர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2006-ம் ஆண்டு கொழும்புவில் 3-வது விக்கெட்டுக்காக 624 ரன்களைச் சேர்த்து உலக சாதனையை வைத்துள்ளனர்.

2-ம் இடத்திலும் இலங்கை ஜோடியான சனத் ஜெயசூரியா-மகாணாமா ஜோடியே உள்ளது, இவர்கள் இந்தியாவை புரட்டி எடுத்த அந்த டெஸ்ட் போட்டியில் 2-வது விக்கெட்டுக்காக 576 ரன்களைச் சேர்த்தனர். அதாவது 39/1 பிறகு அடுத்த விக்கெட் 615-ல் விழுந்தது.

தற்போது மே.இ.தீவுகளுக்கு எதிராக ஆஸ்திரேலியா சிலசாதனைகளை உடைக்கத் திட்டமிட்டபடி முதலில் 4-வது விக்கெட்டுக்காக உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது.

வோஜஸ்-ஷான் மார்ஷ் இன்னும் 3 ரன்கள் சேர்த்திருந்தால் ஆஸ்திரேலியா டெஸ்ட் வரலாற்றில் அதிகபட்ச ஜோடி ரன்கள் என்ற சாதனையையும் நிகழ்த்தியிருக்கும். டான் பிராட்மேன், பில் போன்ஸ்ஃபோர்ட் ஆகியோர் ஓவல் மைதானத்தில் 1934-ம் ஆண்டு 451 ரன்களை குவித்ததே சிறந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் ஜோடி ரன் சேர்ப்பு சாதனையாகும். இதனால் வோஜஸ்-மார்ஷ் சாதனை ஆஸி. டெஸ்ட் வரலாற்றில் தற்போது 2-ம் இடத்தில் உள்ளது.

நேற்று 438/3 என்று தொடங்கிய ஆஸ்திரேலியா இன்று 583/4 என்று டிக்ளேர் செய்தது. ஆடம் வோஜஸ் 285 பந்துகளில் 33 பவுண்டரிகளுடன் 269 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஷான் மார்ஷ் 266 பந்துகளில் 15 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 182 ரன்கள் குவித்து இடது கை சுழற்பந்து வீச்சாளர் வாரிக்கன்னிடம் வீழ்ந்தார். மிட்செல் மார்ஷ் 1 ரன் எடுத்து நாட் அவுட்டாக இருந்த போது டிக்ளேர் செய்யப்பட்டது.

தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் 2-ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. டேரன் பிராவோ 94 ரன்களுடனும், கிமார் ரோச் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

பிராத்வெய்ட் 2 ரன்களில் ஹேசில்வுட்டிடம் எல்.பி.ஆனார். சந்திரிகா 25 ரன்களுக்கு நன்றாகவே ஆடினார். தன்னம்பிக்கையுடன் ஆடிய அவர் லயன் வீசிய ஒரு ஆஃப் பிரேக் பந்துக்கு அடுத்த பந்து திரும்பாது சென்ற போது டிரைவ் ஆடி எட்ஜ் செய்து ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சாமுயெல்ஸ் துயரம் தொடர்ந்தது 9 ரன்களில் லயன் வீசிய பந்தை அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். பந்தின் லைனை தவறாக வாசித்த அவர் டிரைவ் ஆட பந்து சரியாகச் சிக்கவில்லை. இது ஒரு அபாரமான கேட்ச் ஆகும். இடது புறம் பாய்ந்து பிடித்தார் லயன். பழைய இந்திய ஸ்பின்னர் பிரசன்னா இப்படியாக சில இங்கிலாந்து வீரர்களை வீழ்த்தியதை நினைவூட்டியது இந்த அவுட்.

அதே ஓவரின் கடைசி பந்தில் பிளாக்வுட் ரன் எடுக்காமல் நேதன் லயனின் உள்ளே திரும்பிய ஆஃப் ஸ்பின் பந்தை தளர்வாக ஆடாமல் இறுக்கமாக ஆடியதால் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு ஷார்ட் லெக் திசையில் பர்ன்ஸ் கையில் கேட்ச் ஆனது.

தினேஷ் ராம்தின் இறங்கி 8 ரன்கள் எடுப்பதற்குள் தவியாய் தவித்து பிறகு ஹேசில்வுட்டின் முன்னால் வந்து ஆட வேண்டிய பந்தை பின்னால் சென்று ஸ்டம்ப்களை இழந்தார்.

கேப்டன் ஜேசன் ஹோல்டர் 15 ரன்கள் எடுத்து பீட்டர் சிடில் பந்தில் நடுவரின் தவறான தீர்ப்புக்கு எல்.பி. ஆகி வெளியேறினார். அவர் 3-வது நடுவரிடம் மேல்முறையீடு செய்யவில்லை. ஆனால் ரிப்ளேயில் பந்து ஸ்டம்புகளுக்கு மேலாகச் சென்றது தெரிந்தது. 116/6 என்ற நிலையிலிருந்து டேரன் பிராவோ, கிமார் ரோச் 207 ரன்கள் வரை மேலும் சேதமேற்படமால் கொண்டு சென்றனர். டேரன் பிராவோ தொடக்க நிலை சந்தேகங்களுக்குப் பிறகு அபாரமான பவுண்டரிகளை அடித்தார். அவர் தன் 94 ரன்களில் 17 பவுண்டரிகளை அடித்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா தரப்பில் லயன் 3 விக்கெட்டுகளையும் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும், சிடில் ஒரு (ஓசி) விக்கெட்டையும் கைப்பற்றினர். மே.இ.தீவுகள் 207/6.

SCROLL FOR NEXT