இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா-ரித்திகா திருமணம் மும்பையில் நடைபெற்றது. சச்சின் உள்ளிட்ட வீரர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா (28), தனது நீண்ட கால தோழியான ரித்திகாவை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்களது திருமணத்திற்கு இருவீட்டினரும் பச்சைகொடி காட்ட கடந்த மே மாதம் மும்பையில் வைத்து நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். இந்நிலையில் ரோஹித் சர்மா-ரித்திகா திருமணம் நேற்றுமுன்தினம் மும்பை பாந்த்ராவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
வீரர்கள் வாழ்த்து
இதில் இருவீட்டை சேர்ந்த உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் இந்திய அணி வீரர்கள் கலந்துகொண்டனர். ரோகித்- ரித்திகா தம்பதியை சச்சின் டெண்டுல்கர் தனது மனைவியுடன் நேரில் வந்து வாழ்த்தினார். யுவராஜ்சிங், தனது காதலி ஹஸல்கீச்சுடன் திருமணத்தில் பங்கேற்றார். தோனி, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, புஜாரா, ரவீந்திர ஜடேஜா மற்றும் இந்தி நடிகை சோனாக்ஸி சின்ஹா உள்ளிட்ட நட்சத்திரங்கள் உட்பட பலரும் மணமக்களை நேரில் வாழ்த்தினார்கள்.