விளையாட்டு

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் மீண்டும் 14 அணிகள்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடி முடிவு

டி. கார்த்திக்

2027 மற்றும் 2031-ம் ஆண்டுகளில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 14 அணிகளை அனுமதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முடிவு செய்துள்ளது.

ஐம்பது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் சுவாரசியத்தைக் கூட்டும் வகையில் பலமான 10 அணிகள் மட்டும் பங்கேற்கும் தொடராக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2015-ல் மாற்றியது. அதன்படி 2019-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 10 அணிகள் மட்டுமே பங்கேற்றன. வரும் 2023-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் 10 அணிகள் மட்டுமே பங்கேற்க உள்ளன.

இந்நிலையில் மீண்டும் பழையபடி 14 அணிகள் பங்கேற்கும் வண்ணம் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை மாற்ற ஐ.சி.சி. முடிவு செய்துள்ளது.

செவ்வாய் அன்று ஐ.சி.சி.யின் நிகழ்வுக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2023 முதல் 2031 வரை நடைபெற உள்ள ஐ.சி.சி. தொடர்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டன. இக்கூட்டத்தில், ஏற்கெனவே திட்டமிட்டப்படி 2023-ல் 10 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை தொடரை நடத்தி முடிப்பது என்று முடிவானது.

அதேவேளையில் 2027 மற்றும் 2031-ம் ஆண்டுகளில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 14 அணிகளை அனுமதிக்கவும் இக்கூட்டம் முடிவு செய்தது.

மேலும் கடந்த 1999, 2003ஆம் ஆண்டுகளில் கடைப்பிடிக்கப்பட்ட சூப்பர் சிக்ஸ் சுற்றை 2027, 2031 உலகக் கோப்பையில் மீண்டும் கொண்டுவரவும் இக்கூட்டத்தில் முடிவானது.

சூப்பர் சிக்ஸ் சுற்று மூலம் இந்த உலகக் கோப்பை நடக்க இருப்பதால், 54 போட்டிகள் கொண்டதாக இத்தொடர் இருக்கும். கடைசியாக 2015 உலகக் கோப்பையில் 14 அணிகள் பங்கேற்றன. தற்போது மீண்டும் பழைய நிலைக்கே ஐ.சி.சி. திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT