துபாயில் நடந்த ஆசிய சாம்பியன் குத்துச்சண்டைப் போட்டியில் (ASBC) 91 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சஞ்சீத் குமார் தங்கப்பதக்கம் வென்றார். ஷிபா தபா, அமித் பங்கால் இருவரும் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினர்.
19 வீரர்கள் கொண்ட இந்திய அணி ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்று தங்கம் உள்ளிட்ட 16 பதக்கங்களை வென்றுள்ளது. கடந்த முறை 13 பதக்கங்களை வென்ற நிலையில், இந்த முறை 16 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது இந்திய ஆடவர் அணி.
துபாயில் நேற்று நடந்த 91 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற கஜகஸ்தான் வீரர் வாசிலி லெவிட்டை எதிர்கொண்டார் இந்திய வீரர் சஞ்சீத் குமார். இந்தப் போட்டியில் வாசலி லெபிட்டை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை சஞ்சீத் குமார் வென்றார்.
52 கிலோ எடைப் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் கஜகஸ்தான் வீரர் ஜோய்ரோவ் சகாபுதீனை எதிர்கொண்டார் இந்திய வீரர் அமித் பங்கல். இருவருக்கும் இடையே போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. இந்த ஆட்டத்தில் அமித் பங்கால் 29-28, 28-29, 28-29, 28-29, 30-27 என்ற புள்ளிக்கணக்கில் 2-3 என்ற கணக்கில் சகாபுதீனிடம் போராடித் தோல்வி அடைந்து வெள்ளியோடு விடைபெற்றார்.
64 கிலோ எடைப்பிரிவுக்கான போட்டியில் மங்கோலியா வீரர் பட்டார்சுக் சின்சோரங்கிடம் 3-2 என்ற கணக்கில் வீழ்ந்து வெள்ளி வென்றார் இந்திய வீரர் ஷிவா தபா. ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் 5 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர் என்றபெருமையை ஷிவா தபா பெற்றார். 2013இல் தங்கம், 2017இல் வெள்ளி, 2015, 2019இல் வெண்கலப் பதக்கங்களை ஷிவா தபா வென்றிருந்தார்.
மகளிர் பிரிவில் பூஜா ராணி (75 கிலோ) தங்கப் பதக்கம் வென்றார். மேரி கோம் (51 கிலோ), லால்புட் சாஹி (64 கிலோ), அனுபமா (81 கிலோ) ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றினர். இந்திய வீராங்கனைகள் சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), லோவ்லினா போரோஹெயின் (69 கிலோ), ஜாஸ்மின் (57 கிலோ), சாக்ஸி சவுத்ரி (54 கிலோ) மோனிகா (48 கிலோ), சாவிட்டி (81 கிலோ) ஆகியோர் வெண்கலம் வென்றனர்.