விளையாட்டு

விளையாட்டாய் சில கதைகள்: விபத்தில் உயிரிழந்த ஹன்சி குரோனி

பி.எம்.சுதிர்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து, சூதாட்டப் புகாருக்கு உள்ளான ஹன்சி குரோனி விமான விபத்தில் காலமான நாள் ஜூன் 1, 2002.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வலிமைமிக்க கேப்டன்களில் ஒருவராக இருந்தவர் ஹன்சி குரோனி. 68 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3,714 ரன்களையும், 188 ஒருநாள் போட்டிகளில் 5,565 ரன்களையும் குவித்த ஹன்சி குரோனி, ஒரு காலகட்டத்தில் புகழ்பெற்ற கேப்டனாக இருந்தார். அவரது தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி, பல போட்டிகளில் வெற்றி பெற்றது.

எல்லாம் சரியாக சென்றுகொண்டு இருந்த சமயத்தில் கிரிக்கெட் போட்டிகளின்போது சரியாக ஆடாமல் இருப்பதற்காக ஹன்சி குரோனி சூதாட்டக்காரர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, தான் சூதாட்டக்காரர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாகவும், அவர்களுக்கு தான் பங்கேற்ற சில போட்டிகள் பற்றிய பிட்ச் அமைப்பு, அணியில் இடம்பெறும் வீரர்களின் விவரம் உள்ளிட்ட சில நுட்பமான தகவல்களை முன்கூட்டியே சொன்னதாகவும் ஹன்சி குரோனி, 2000-ம் ஆண்டில் ஒப்புக்கொண்டார். பணத்தின் மீது தான் கொண்ட காதலால், துரதிருஷ்டவசமாக இந்த சூதாட்டச் சுழலில் சிக்கிக் கொண்டதாக இதுபற்றி விசாரித்த கிங்ஸ் கமிஷன் முன்பு கண்ணீர் மல்க ஹன்சி குரோனி தெரிவித்தார். இதற்காக 1996 முதல் 2000 ஆண்டுவரை 1,30,000 டாலர்களை தான் லஞ்சமாக பெற்றதாகவும் ஒப்புக்கொண்டார்.

ஜென்டில்மேன்களின் ஆட்டம் என்று புகழப்பட்ட கிரிக்கெட்டுக்கு, இது அவப்பெயரை ஏற்படுத்தியது. தென் ஆப்பிரிக்க அணியில் இருந்து குரோனி நீக்கப்பட்டார். இதன்பிறகு தனக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை நீக்குவதற்காக பல்வேறு சமூக சேவைகளை குரோனி செய்துவந்தார். இந்நிலையில் 2002-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி, கிரடாக் பீக் என்ற மலைப்பகுதியில் ஏற்பட்ட விமான விபத்தில் ஹன்சி குரோனி உயிரிழந்தார்.

SCROLL FOR NEXT