விளையாட்டு

விளையாட்டாய் சில கதைகள்: 4 ஒலிம்பிக்கில் ஆடிய தன்ராஜ் பிள்ளை

பி.எம்.சுதிர்

இந்திய ஹாக்கி அணியின் முன்னணி நட்சத்திரமாக சுமார் 16 ஆண்டுகள் இருந்தவர் தன்ராஜ் பிள்ளை. அவரைப் பற்றிய சில முக்கிய விஷயங்களைப் பார்ப்போம்

மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகருக்கு அருகில் உள்ள கட்கி என்ற ஊரில் தமிழர் குடும்பத்தில் பிறந்தவர் தன்ராஜ் பிள்ளை. அவரது தந்தை ஹாக்கி ஸ்டேடியத்தை பராமரிப்பவராக இருந்தார். இதனால் அவருடன் அடிக்கடி ஹாக்கி ஸ்டேடியத்துக்கு செல்லும் தன்ராஜ் பிள்ளை, மற்றவர்கள் ஆடுவதைப் பார்த்து, இந்த விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர், உடைந்துபோன பழைய ஹாக்கி மட்டைகளைக் கொண்டு, ஹாக்கி விளையாடி பயிற்சி பெற்றார்.

சிறுவயதில் உள்ளூரில் ஏற்பட்ட சிறு பிரச்சினையில், போலீஸார் தன்னை கைது செய்து விடுவார்களோ என்று பயந்து தன்ராஜ் பிள்ளை, தனது அண்ணனுடன் மும்பைக்கு இடம்பெயர்ந்தார். இதனால் அங்குள்ள ஹாக்கி மைதானங்களில் சிறு வயதில் அவர் பயிற்சி பெற முடிந்தது.

இந்திய ஹாக்கி வீரர்களிலேயே 4 ஒலிம்பிக் போட்டிகள், 4 உலகக் கோப்பை போட்டிகள், 4 சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள், 4 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் விளையாடிய ஒரே ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளைதான். அவரது தலைமையின் கீழ் 1998-ம் ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும், 2003-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை ஹாக்கி போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது.

1998-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியின்போது, சரியாக கோல்கீப்பிங் செய்யவில்லை என்று கூறி, அப்போதைய கோல் கீப்பரான ஆசிஷ் பல்லாலை மாற்றினார் தன்ராஜ் பிள்ளை. ஆனால், இதே போட்டியில் பெனாலிடி ஷூட் அவுட் முறையில் இந்தியாவுக்காக அவர் சிறப்பாக கீப்பிங் செய்ய, தன் தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்டார் தன்ராஜ் பிள்ளை. இந்தியாவுக்காக 339 போட்டிகளில் ஆடிய அவர், 160 கோல்களை அடித்துள்ளார்.

SCROLL FOR NEXT