விளையாட்டு

மகாராஷ்டிரா அணியிடம் தோல்வி: ரஞ்சி கோப்பை காலிறுதி வாய்ப்பை இழந்தது கர்நாடகா

செய்திப்பிரிவு

ரஞ்சி கோப்பை காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை நடப்பு சாம்பியன் கர்நாடகா இழந்தது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மகாராஷ்டிராவிடம் 53 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

293 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் கடைசி நாள் ஆட்டத்தை 1 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் என்ற நிலையில் தொடர்ந்து விளையாடிய கர்நாடக அணி 72 ஓவரில் 239 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை சந்தித்தது. இதனால் அந்த அணி காலிறு திக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

ஏற்கெனவே காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த மகாராஷ்டிரா அணிக்கு இந்த வெற்றி எந்த வகையிலும் உதவாமல் போனது. அந்த அணி ஏ பிரிவில் 5வது இடத்தை பிடித்தது. ஏ பிரிவில் இருந்து விதர்பா 29 புள்ளிகளுடனும், பெங்கால் 28 புள்ளிகளுடனும், அசாம் 26 புள்ளிகளுடனும் காலிறுதிக்கு முன்னேறின.

இதேபோல் மும்பை-குஜராத் அணிகள் இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. குஜராத் அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் காலிறுதிக்கு தகுதி பெறும் என்ற நிலை இருந்தது. போட்டி டிரா ஆனதால் அந்த அணிக்கு ஒரு புள்ளி மட்டுமே கிடைத்ததால் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது. பி பிரிவில் இருந்து மும்பை அணி 35 புள்ளிகளுடனும், பஞ்சாப் 26 புள்ளிகளுடனும், மத்திய பிரதேசம் 24 புள்ளிகளுடனும் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

சி பிரிவில் ஜார்கணட் அணி தனது கடைசி ஆட்டத்தில் ஹைதராபாத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த பிரிவில் இருந்து சவுராஷ்டிரா 36 புள்ளிகளுடனும், ஜார்கண்ட் 31 புள்ளிகளுடனும் காலிறுதிக்கு முன்னேறின.

SCROLL FOR NEXT