விளையாட்டு

சையத் கிர்மானிக்கு கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருது

பிடிஐ

2015-ம் ஆண்டுக்கான சிகே.நாயுடு கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம் சையத் கிர்மானி ரூ.25 லட்சம் பெறுவார். 88 டெஸ்ட் போட்டிகளை ஆடியுள்ள சையத் கிர்மானி 198 விக்கெட்டுகளுக்குக் காரணமாகியுள்ளார். இதில் 160 கேட்ச்கள் 38 ஸ்டம்பிங்குகள்.

உலக கிரிக்கெட்டின் பெரிய பேட்ஸ்மென்களின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த பிரசன்னா, பேடி, சந்திரசேகர், வெங்கட்ராகவன் ஆகிய 4 ஸ்பின்னர்கள் கோலோச்சிய காலத்தில் சையத் கிர்மானி அபாரமான விக்கெட் கீப்பிங் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். பிற்பாடு கபில்தேவுக்காகவும் சில அபாரமான கேட்ச்களை பிடித்துள்ளார்.

எதிரணியினருக்கு எப்போதும் சவாலாகத் திகழ்ந்தவர் கிர்மானி. பேட்டிங்கில் கீழ்வரிசையில் களமிறங்கி சில முக்கியமான இன்னிங்ஸ்களை ஆடி பங்களிப்பு செய்துள்ளார். அவ்வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 சதங்களுடன் 2,759 ரன்கள் அடித்துள்ளார். இதில் 12 அரைசதங்களும் அடங்கும்.

49 ஒருநாள் போட்டிகளிலும ஆடியுள்ளார், ஆனால் இதில் 373 ரன்களை மட்டுமே அவரால் எடுக்க முடிந்தது.

1983-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டர்ன்பிரிட்ஜ் வெல்ஸில் கபில்தேவ் ஆடிய மாரத்தான் இன்னிங்ஸான 175 நாட் அவுட்டின் போது கிர்மானி, கபில் கூட்டணி 126 ரன்களை சேர்த்தது. இதில் கிர்மானியின் பங்களிப்பு குறைவாக இருந்தாலும் அவர் கபிலுக்கு உறுதுணையாக நின்றது பெரும்பங்களிப்பாகவும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு இன்னிங்ஸாகவும் அமைந்தது.

சையத் கிர்மானிக்கு ஏற்கெனவே பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவிலும் இருந்துள்ளார் கிர்மானி.

SCROLL FOR NEXT