விளையாட்டு

மெர்ல்பர்ன் டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி

பிடிஐ

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 551 ரன்களை எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 91 ரன்களை எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 345 ரன்களை எடுத்திருந்தது. ஸ்டீவ் ஸ்மித் 32 ரன்களுடனும், ஆடம் வோஜஸ் 10 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.

நேற்றைய தினம் ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆஸ்திரேலிய வீரர்கள் உறுதியாக நின்று ரன்களை சேர்த்தனர். அவர்களை அவுட் ஆக்க மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சாளர்கள் செய்த அனைத்து முயற்சிகளும் வீணானது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நேற்று அதிரடியாக ஆடி இந்த ஆண்டில் தனது 6-வது சதத்தை பூர்த்தி செய்தார். 8 பவுண்டரிகளை அடித்த அவர் நேற்று ஆட்டமிழக்காமல் 134 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் இந்த ஆண்டில் அவர் சேர்த்த மொத்த ரன்களின் எண்ணிக்கை 1,404-ஆக உயர்ந்தது. இது இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன்கள் ஆகும். இந்த ஆண்டுக்கான ரன் குவிப்பில் அவருக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் (1,357 ரன்கள்) உள்ளார்.

மறுபுறத்தில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஈடுகொடுத்து ஆடிய ஆடம் வோஜஸ் 12 பவுண்டரிகளுடன் 106 ரன்களைக் குவித்து கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்த ஆண்டில் 1000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் வோஜஸ் இணைந்தார். ஸ்டீவ் ஸ்மித் - வோஜஸ் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 223 ரன்களைச் சேர்த்தது. அணியின் ஸ்கோர் 551-ஆக இருந்தபோது ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக ஸ்டீவ் ஸ்மித் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து ஆடவந்த மேற்கிந்திய தீவுகள் அணி, ஆட்டத்தின் தொடக்கம் முதலே சரிவைச் சந்தித்தது. கே.சி.பிராத்வைட் (17 ரன்கள்), சந்திரிகா (25 ரன்கள்), சாமுவேல்ஸ் (0), பிளாக்வுட் (28 ரன்கள்), ராம்தின் (0), ஹால்டர் (0) என்று அடுத்தடுத்து விக்கெட்கள் சரிய நேற்றைய ஆட்டத்தின் இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 91 ரன்களை எடுத்திருந்தது. பிராவோ 13 ரன்களுடனும், சி.ஆர்.பிராத்வைட் 3 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர். ஆஸ்தி ரேலிய அணியில் பாட்டின்சன், சிடில், லியான் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

மேற்கிந்திய தீவுகள் அணியை விட தற்போது 460 ரன்கள் அதிகம் பெற்றுள்ளதால் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.

SCROLL FOR NEXT