விளையாட்டு

நெருக்கடி சூழ்நிலைகளில் மன அமைதி காப்பதை தோனியிடமிருந்து கற்க விரும்புகிறேன்: விராட் கோலி

பிடிஐ

அழுத்தம் தரும் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளில் மன அமைதி காப்பதை தோனியிடமிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்று டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

இது தொடர்பாக மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சஞ்சய் மஞ்சுரேக்கர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் விராட் கோலி, ரஹானே, ஷிகர் தவண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதில் விராட் கோலி கூறியிருப்பதாவது:

கேப்டன்சியைப் பொறுத்தவரை தோனி ஒரு வரம்பை நிர்ணையித்துள்ளார். அவர் சாத்தியமான அனைத்தையும் வென்றார், ஒருநாள் தரவரிசையில் முதலிடம், டெஸ்ட் தரவரிசையில் முதலிடம், டி20-யிலும் கூட. மற்ற எந்த ஒரு கேப்டன் சாதிக்கவும் அவர் எதையும் விட்டு வைக்கவில்லை.

ஆனால் டெஸ்ட் வடிவத்தில் நான் செய்ய முயற்சிப்பதெல்லாம், நான் முன்பே இது பற்றி கூறியது போல், தோனியிடமிருந்து மன அமைதியை கற்க விரும்புகிறேன்.

இந்த விஷயத்தில் கடந்த 2 தொடர்களாக மேம்பட்டிருப்பதாக உணர்கிறேன். ஆனால் நெருக்கடி சூழ்நிலைகளில் பதற்றமடையாமல் இருப்பதை அவரிடமிருந்து மேலும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.

நான் இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன், நான் துணைக் கேப்டனாக இருந்த போது பல்வேறு சூழ்நிலைகளில் தோனி செயலாற்றியதை கவனித்துள்ளேன்.

தோனியின் தலைமையில் 2007 டி20 உலகக் கோப்பையை வென்றது பற்றி...

நாடு முழுதும் 2007 டி20 உலகக் கோப்பையை பார்த்தபோது நானும் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியை கண்டு மகிழ்ந்தேன், ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு முன்னதாக அது நடந்தது சிறப்பு வாய்ந்தது. இந்த வடிவம் எப்படி என்று ஒருவருக்கும் தெரியாத நிலையில் அந்த உலகக் கோப்பை உற்சாகத்தை ஏற்படுத்தியது.

அந்தக் கோப்பையை வென்றது இந்திய கிரிக்கெட்டின் மைல்கல். அதுதான் எம்.எஸ்.தோனி என்ற ஆளுமையை உலக கிரிக்கெட்டுக்கு அறிமுகம் செய்தது, களத்தில் அவரது உத்திகள், இளம் அணியை உலக அரங்கில் அவர் வழிநடத்தியது என்று அவரை உலகுக்கு அறிமுகப் படுத்திய தொடர் அது.

ரோஹித் சர்மா, ஸ்ரீசாந்த் போன்றவர்கள் அணிக்கு புதிதானவர்கள், உலக் அரங்கில் இவர்களை வழிநடத்தி நாம் இதனை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் தோனி, அது முதல், உலக கிரிக்கெட்டில் கேப்டன்சியைப் பொறுத்தமட்டில் ஒரு பெரிய ஆளுமையாகிவிட்டார் தோனி.

அவரது கேப்டன்சியை புகழாதவர்களே இல்லை, இந்திய கிரிக்கெட்டின் செல்வாக்கு மிக்க நபரானார் தோனி.

இவ்வாறு கூறினார் கோலி.

SCROLL FOR NEXT