விளையாட்டு

செய்தித் துளிகள்: பாகிஸ்தான் தொடர் ரத்தா?

செய்திப்பிரிவு

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே வரும் 24ம் தேதி இலங்கையில் வைத்து ஒருநாள் போட்டி, டி 20 தொடர் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தன. இதற்கிடையே இந்த போட்டியில் இந்தியா பங்கேற்க மறுத்துவிட்டதாகவும் அதனால் கிரிக்கெட் தொடர் நடைபெறாது என்றும் பாக். கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகார்யார் கான் நேற்றுமுன்தினம் அறிவித்தார்.

இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர் நேற்று கூறும்போது, "தொடர் ரத்தானது தொடர்பாக பாக். வாரியத்திடம் இருந்து எழுத்துப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. எங்களை பொறுத்தவரையில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்காக மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அவர்களிடம் இருந்து இன்னும் எந்த தகவலும் வரவில்லை. தகவல் வந்த பின்னர் முறைப்படி மீடியாக்களுக்கு தெரிவிக்கப்படும். இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தான் நடத்துகிறது. அதனால் தொடர் ரத்து குறித்து பதில் கூறும் இடத்தில் நான் இல்லை" என்று தெரிவித்தார்.

-----------------------------------------------------------

ஸ்ரீகாந்த் மீண்டும் தோல்வி

தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள உலக சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் இறுதி சுற்று போட்டி துபையில் நடைபெற்று வருகிறது.

இதன் ஆண்கள் ஒற்றையரில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் காந்த் முதல் ஆட்டத்தில், ஜப்பானின் கென்டோ மோமோட்டாவிடம் 13-21, 13-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.

இந்நிலையில் காந்த் நேற்று 2வது ஆட்டத்தில் டென்மார்க்கின் விக்டரை எதிர்த்து விளையாடினார். ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய விக்டர் 21-13, 21-18 என்ற நேர்செட்டில் காந்த்தை தோற்கடித்தார். வெறும் 37 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவடைந்தது. இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்ததால் தொடரில் இருந்து காந்த் வெளியேற்றப்பட்டார்.

-----------------------------------------------------------

விக்கெட் கீப்பராக டி வில்லியர்ஸ்

இங்கிலாந்துக்கு எதிரான உள் நாட்டு தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டி வில்லியர்ஸ் விக்கெட் கீப்பராக களமிறங்குகிறார்.

4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி இன்று தென் ஆப்பிரிக்கா வந்து சேருகிறது. முதல் டெஸ்ட் வரும் 26ம் தேதி டர்பனில் தொடங்குகிறது. முன்னதாக இங்கிலாந்து அணி இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் விக்கெட் கீப்பர் என்று தனியாக யாரும் இடம்பெற வில்லை. டி வில்லியர்ஸே விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சுற்றுப்பயணத்தில் விக்கெட் கீப்பராக இருந்த விலாஸ் சிறப்பாக செயல்படாததால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மேலும் கூடுதலாக ஒரு பேட்ஸ் மேனை அணியில் இடம் பெறச்செய்யும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அணியின் தேர்வுக்குழு ஒருங்கிணைப்பாளர் லிண்டா சோன்டி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT