சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் எல் பாலாஜி | கோப்புப்படம் 
விளையாட்டு

எப்படி தொற்று ஏற்பட்டது என இதுவரை தெரியவில்லை; எனக்காக அல்ல மற்ற வீரர்களுக்காகவும் பிரார்த்தனை செய்தேன்: சிஎஸ்கே பயிற்சியாளர் பாலாஜி உருக்கம்

ஏஎன்ஐ

எங்களுக்கு கரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என இதுவரை தெரியவில்லை. எனக்காகப் பிரார்த்தனை செய்ததைவிட, என்னைச் சுற்றி அமர்ந்திருந்த, நெருக்கமான வீரர்களுக்காகத்தான் பிரராத்தனை செய்தேன் என சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் எல் பாலாஜி உருக்கமாகத் தெரிவித்தார்.

14-வது ஐபிஎல் டி20 தொடரில் வீரர்கள் பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து பாதியிலேயே தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் எல்.பாலாஜியும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது உடல், மனநலம் தேறியுள்ளார். அவர் கிரிக்இன்போ தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

எனக்கு கரோனா பாஸிட்டிவ் எனத் தெரிந்ததும் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டேன். அதன்பின் எனக்கு இருந்த உடல்ரீதியான, மனரீதியான பிரச்சினைகளில் இருந்து மீள்வது என்பது மேன் வெஸ் வைல்ட் தொடரில் இருக்கும் அனுபவத்தைப் போல்தான் இருந்தது

கடந்த 2-ம் ேததி எனக்கு லேசான சோர்வு இருந்தது. உடல்வலி, லேசான மூக்கடைப்பு இருந்தது. அன்று பிற்பகலில் பரிசோதித்தேன். மறுநாள் காலை எனக்கு பாஸி்ட்டிவ் வந்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் இதுவரை பயோபபுள் விதிகளை மீறவில்லையே எவ்வாறு எனக்கு பாஸிட்டிவ் வந்தது என குழப்பமாக இருந்தது அதுமட்டுமல்லாமல் அணியின் பயோபபுள் சூழலே கேள்விக்குறியாகிவிடுமே என கவலைப்பட்டேன்.

மும்பைக்கு ஏப்ரல் 26ம் தேதி சென்றபோது மறுநாள் பரிசோதனை செய்தோம், 28ம் தேதி போட்டி முடித்துவிட்டு, மீண்டும் ஒரு பரிசோதனை, மே 1ம் தேதி மும்பையுடன் போட்டியை முடித்தோம். என்னுடைய நோய் எதிர்ப்புச் சக்தி மீது எனக்கு அதிகமான நம்பிக்கை இருந்தது.

மே 2-ம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் எனக்கும், சிஇஓ காசி விஸ்வநாதனுக்கும் பாஸிட்டிவ் இருப்பதுதெரியவந்தது. ஆனால் அது தவறான முடிவு எனத் தெரியவந்தது. இருப்பினும் மீண்டும் எனக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் பாஸி்ட்டிவ் உறுதியானது.

இதனால் அணி வீரர்களைவிட்டு ஒதுங்கி தனிமையானேன். எனக்கு கவலையெல்லாம் என்னைப் பற்றி அல்ல, என்னுடன் பழகிய, சிரித்து, தொட்டுப் பேசிய மற்ற வீர்ரகள் நிலை என்னாகும் என்பதுதான் கவலையாக இருந்தது. தொடக்கத்தில் என் உணர்வுகளை வெளிப்படுத்தவில்லை. வெளியே மக்கள் கரோனாவில் கூட்டம் கூட்டமாக உயிரிழக்கிறார்கள் என்பதை அறிந்து கவலையடைந்தேன்.

என் குடும்பத்தினர், நண்பர்கள் பற்றிய கவலை அதிகமானது. என் உடல்நிலையை தீவிரமாகக் கவனிக்கத் தொடங்கியபோது பதற்றமாக இருந்தது. என்னை நான் கவனித்துக்கொண்டாலும், என் அணியில் உள்ள மற்ற வீரர்களின் நிலை குறித்து எனக்கு கவலையாக இருந்தது. என்னால் எந்த வீரராவது தொற்றால் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது என கவலைப்பட்டேன். அவர்களின் உடல்நலனுக்காகத்தான் பிரார்த்தனை செய்தேன்.

மைக் ஹசிக்கும் தொற்று ஏற்பட்டு பின்னர் எனக்குத் தெரியவந்தது. ஆனால் உண்மையாக் சொல்கிறேன். இதுவரை எங்களுக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என உண்மையாகத் தெரியவில்லை, கண்டுபிடிக்கவும் முடியவில்லை.

கடுமையான விதிகள் இருந்தும், பயோபபுள் சூழலுக்குள் இருந்தும் தொற்று ஏற்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு என்பது உயிர்வாழ்வதற்கான போராட்டம் என்றுதான் நான் பார்க்கிறேன். லட்சக்கணக்கான மக்ள் பாதிக்கப்படுகிறார்கள், பெரும்பாலும் குணமடைந்துவிடுகிறார்கள். ஆனால், பலருக்கும் அதிர்ஷ்டம் இல்லாமல், வாழ முடியாமல், பல்வேறு காரணங்களால் வாழ்க்கையை இழக்கிறார்கள்
இவ்வாறு பாலாஜி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT