தோனியிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் திறமைகள் உள்ளன, அவர் ஒரு பெரிய கிரிக்கெட் வீரர் என்று முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜாம்ஷெட்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சவுரவ் கங்குலி கூறும்போது, “தோனி ஒரு பெரிய கிரிக்கெட் வீரர், சர்வதேச அரங்கில் தரத்தை நிர்ணயம் செய்தவர். இந்தியாவுக்காக மேலும் சில ஆண்டுகள் பங்களிப்பு செய்ய அவரிடம் கிரிக்கெட் திறன்கள் இன்னும் உள்ளன” என்றார்.
2019 உலகக் கோப்பை போட்டிகளுக்கு யார் கேப்டனாக இருப்பார்கள் என்ற கேள்விக்குப் பதில் அளித்த கங்குலி, “அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. 2019-ல் தானே நடைபெறுகிறது” என்றார்.
தோனி பற்றி மேலும் கூறும்போது, “தோனி அளவுக்கு கிரிக்கெட்டில் உயர்வடைய ஒருவர் கடுமையாக உழைப்பது அவசியம். உலக கிரிக்கெட் அரங்கில் அவர் ஒரு தரத்தை நிர்ணயம் செய்துள்ளார்.
விராட் கோலி நன்றாக கேப்டன்சி செய்கிறார், நாட்டின் கிரிக்கெட்டை முன்னெடுத்துச் செல்ல அவரிடம் திறமை உள்ளது.
யுவராஜ் சிங் எதிர்பார்ப்புக்கு இணங்க ஆடுவார் என்றே நம்புகிறேன். அவர் நிரூபிப்பார் என்று நான் உறுதியாக நம்பிக்கை வைத்துள்ளேன்.
இந்தியா-பாகிஸ்தான் தொடர் குறித்து..
இருநாடுகளுக்குமான கிரிக்கெட் தொடர் உண்மையில் உற்சாகமானதாகும், ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும். ஆனால் முடிவு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கையில் மட்டும் இல்லை. அரசு இது குறித்து நல்ல முடிவு எடுக்கும் என்றே நான் எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு கூறினார் கங்குலி.