விளையாட்டு

விளையாட்டாய் சில கதைகள்: பொறுமையால் கிடைத்த வெற்றி

பி.எம்.சுதிர்

சாக்ஷி மாலிக், வினேஷ் பொகட் போன்ற இந்தியாவின் சிறந்த மல்யுத்த வீராங்கனைகளின் வரிசையில் இப்போது சீமா பிஸ்லாவும் இணைந்துள்ளார். டோக்கியோவில் இன்னும் 2 மாதங்களுக்கு பிறகு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார் சீமா பிஸ்லா.

ஹரியாணாவில் உள்ள குதான் கிராமத்தில் பிறந்தவர் சீமா. இவரது அப்பாவும் மாமாவும் மல்யுத்த வீரர்களாக இருந்தனர். இதனால் சிறுவயதிலேயே மல்யுத்தத்தால் ஈர்க்கப்பட்டு, இதில் பயிற்சியைத் தொடங்கியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து வென்றுவந்த சீமா, 2008-ம் ஆண்டில், தான் பங்கேற்ற முதலாவது சர்வதேச போட்டியான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலேயே வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். ஆரம்பத்தில் மிக வேகமாக இருந்த இவரது பயணம், பின்னர் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட ஒரு காயத்தால் தடைபட்டுப் போனது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளால் தொடர்ச்சியாக 4 ஆண்டுகளுக்கு அவரால் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை.

இது அவரது மனநிலையைக் கடுமையாக பாதித்தாலும், தனக்காக ஒரு நாள் வரும் என்று பொறுமையாகக் காத்திருந்தார். ஆரம்பத்தில் 67 கிலோ எடைப்பிரிவு போட்டிகளில் பங்கேற்று வந்த சீமா, தனது எடையைக் குறைத்து 50 கிலோ எடைப்பிரிவுக்கு மாறினார். மேலும் தனது திறமையை அதிகரிக்க ஆண்களுடன் சேர்ந்து பயிர்சிகளைத் தொடங்கினார். இதைத்தொடர்ந்து 50 கிலோ எடைப்பிரிவில் அவர் வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கினார். இந்தச் சூழலில்தான் நடப்பாண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார்.

“கடந்த சில ஆண்டுகளாக, தான் கவனிக்கப்படாதவராக இருந்தபோதிலும், சீமா பொறுமையை கைவிடவில்லை. இதுதான் அவருக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தகுதியை பெற்றுத் தந்துள்ளது” என்கிறார் சீமாவின் பயிற்சியாளர் கிருபா சங்கர் படேல். இந்த தன்னம்பிக்கை அவருக்கு ஒலிம்பிக்கிலும் பதக்கம் பெற்றுத்தரும் என்று நம்புவோம்.

SCROLL FOR NEXT