ரஞ்சி கோப்பை தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 27 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டம் இன்று தொடங்குகிறது. தற்போதைய நிலையில் பி பிரிவில் உள்ள மும்பை அணி மட்டுமே காலிறுதிக்கான இடத்தை உறுதி செய்துள்ளது. அந்த அணி 32 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த பிரிவில் இருந்து மேலும் 2 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.
இந்த இடத்துக்கு குஜராத், தமிழகம் உள்ளிட்ட 6 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. குஜராத் அணி 23 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. அந்த அணி இன்று தொடங்கும் கடைசி ஆட்டத்தில் மும்பையை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் குஜராத் அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலைப்பெற்றாலே காலிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். ஆனால் தோல்வியை சந்தித்தால் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
20 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணி, 18 புள்ளிகளுடன் உள்ள தமிழகத்தை இன்று திண்டுக்கலில் தொடங்கும் போட்டியில் சந்திக்கிறது. இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் முக்கியமானது தான். தமிழக அணி இந்த ஆட்டத்தில் போனஸ் புள்ளிகளுடன் வெற்றி பெற்றால் மட்டுமே காலிறுதிக்கு எளிதாக முன்னேற முடியும்.
போனஸ் புள்ளி இல்லாமல் வெற்றி பெற்றால் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். தமிழக அணி போனஸ் புள்ளிகள் இல்லாமல் வெற்றி பெற்றால், குஜராத் அணி மும்பையை தோற்கடிக்க வேண்டும், உத்தரபிரதேசம்-பரோடா ஆட்டம் டிராவில் முடிவடைய வேண்டும். மத்திய பிரதேச அணி, ஆந்திர அணியை போனஸ் புள்ளிகளுடன் தோற்கடிக்காமல் இருக்க வேண்டும்.
மத்திய பிரதேச அணிக்கு காலிறுதிக்கு முன்னேறுவதற்கு சிறிய அளவிலான வாய்ப்பே உள்ளது. 17 புள்ளிகளுடன் உள்ள அந்த அணி போனஸ் புள்ளிகளுடன் ஆந்திராவை வீழ்த்தினால் காலிறுதியில் கால் பதிக்கலாம். போனஸ் புள்ளிகள் இல்லாமல் வெற்றி பெற்றால் 23 புள்ளிகளுடன், பஞ்சாப்-தமிழகம், உத்தரபிரதேசம்-பரோடா அணிகளின் போட்டி முடிவை பொறுத்து மத்திய பிரதேச அணியின் அடுத்த கட்ட நிலவரம் தெரியவரும்.
தமிழகம்-பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி திண்டுக்கலில் உள்ள என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி நேற்று இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.