விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பியட் சுழலில் திணறல்; இந்தியா 231/7- அஜிங்க்ய ரஹானே அரைசதம் அடித்தார்

செய்திப்பிரிவு

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று தொடங்கிய கடைசி டெஸ்டில் தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் டேன் பியட் சுழலில் இந்திய வீரர்கள் தடுமாறினர். முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது. டேன் பியட் 4 விக்கெட் வீழ்த்தினார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் நேற்று டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் கடைசி டெஸ்ட் தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் அமித் மிஸ்ரா நீக்கப்பட்டு உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார்.

தென் ஆப்பிரிக்க அணியில் 3 மாற்றங்கள் இருந்தது. வான் சைல், ரபாடா, ஹார்மர் ஆகியோருக்கு பதிலாக டெம்பா பவுமா, கைல் அபாட், டேன் பியட் ஆகியோர் இடம் பெற்றனர். முரளி விஜய், ஷிகர் தவண் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முரளி விஜய் 12, ஷிகர் தவண் 33 ரன்களில் டேன் பியட், சுழலில் ஆட்டமிழந்தனர். 14 ரன்கள் எடுத்த நிலையில் புஜாரா, கைல் அபாட் பந்தில் போல்டானார்.

66 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே ஜோடி பொறுமையாக ஆடியது. 38.1 ஓவரில் இந்தியா 100 ரன்களை கடந்தது.

ஸ்கோர் 136 ஆக இருந்த போது டேன் பியட் பந்தில் கோலி ஆட்டமிழந்தார். அவர் அடித்த பந்தை விக்கெட் கீப்பர் விலாஸ் அருமையாக கேட்ச் செய்தார். கோலி 62 பந்தில் 7 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்தார்.

இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய ரோஹித் சர்மா 1 ரன்னில் வெளியேறினார்.

அவரது விக்கெட்டையும் டேன் பியட் கைப்பற்றினார். 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய விருதிமான் சஹா 15 பந்துகளை சந்தித்து 1 ரன் எடுத்த நிலையில் கைல் அபாட் பந்தில் போல் டானார். அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் விழுந்ததால் இந்திய அணி சரிவை சந்தித்தது. ரஹானே மட்டும் தாக்குப்பிடித்து ஆடினார். அவர் 91 பந்தில், 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். அவருக்கு உறுதுணையாக ஆடிய ஜடேஜா 24 ரன் சேர்த்த நிலையில் கைல் அபாட் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஸ்கோர் 198 ஆக இருந்தது. இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 59 ரன் எடுத்தது.

நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 84 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது. ரஹானே 89, அஸ்வின் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் டேன் பியட் 4, கைல் அபாட் 3 விக்கெட் கைப்பற்றினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT