2016-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லாவிட்டாலும், இந்திய விளையாட்டு ரசிகர்களின் உள்ளத்தை வென்றவர் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மகார். இந்த ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெறுவது சந்தேகமாக இருக்கும் நிலையில், அந்த கவலையைப் போக்கும் விதமாக ஒலிம்பிக் போட்டிக்கு பிரணதி நாயக் தகுதி பெற்றுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜர்காம் என்ற ஊரை சேர்ந்தவர் பிரணதி நாயக். இவரது அப்பா பேருந்து ஓட்டுநர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பிரணதி, தனது 9-வது வயது முதல் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பயிற்சி பெற்று வருகிறார். ஒரு கட்டத்தில் தனது ஊரில் ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற போதுமான வசதிகள் இல்லை என்பதால், கொல்கத்தாவுக்கு குடிபெயர்ந்தார் பிரணதி.
அவரது பயிற்சியாளரான மினாரா பேகம் இந்த காலகட்டத்தில் அவருக்கு மிகவும் உதவியாக இருந்துள்ளார். பிரணதிக்கு பயிற்சி கொடுப்பதுடன், அவருக்கு விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு தேவையான நிதியைத் திரட்டவும் மினாரா பேகம் உதவியாக இருந்துள்ளார். பயிற்சியாளரின் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய பிரணதிக்கு, ரயில்வேயில் வேலையும் கிடைத்துள்ளது.
2019-ம் ஆண்டு நடந்த ஏஷியன் ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் வால்ட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரணதி, அதன் பிறகு கரோனா தொற்று பரவல் காரணமாக அதிக போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது. இந்நிலையில், இம்மாத இறுதியில் நடக்கவுள்ள ஆசிய ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்று, அதில் வெற்றி பெறுவதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற திட்டமிட்டிருந்தார்.
ஆனால், கரோனா தொற்று பரவல் காரணமாக இப்போட்டி நிறுத்தப்பட்டதால், 2019-ம் ஆண்டில் வீரர், வீராங்கனைகள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் அவர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர். அந்த வகையில், தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் பிரணதி நாயக்.