விளையாட்டு

ஹாமில்டன் டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் நியூஸிலாந்து அணி

செய்திப்பிரிவு

இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இன்னும் 47 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற வலுவான நிலையில் நியூஸிலாந்து அணி உள்ளது.

இலங்கை - நியூஸிலாந்து அணிகளிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஹாமில்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 292 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து அணி 2-ம் நாள் ஆட்டத்தின் இறுதியில் 9 விக்கெட் இழப்புக்கு 232 ரன்களை எடுத்திருந்தது.

நேற்று காலை ஆட்டத்தை தொடர்ந்த நியூஸிலாந்து அணி, 237 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸை இழந்தது. நியூஸிலாந்து அணியை விட முதல் இன்னிங்ஸில் 55 ரன்கள் அதிகம் பெற்றிருந்த இலங்கை அணி, 2-வது இன்னிங்ஸை ஆடவந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கருணாரத்னேவும் (27 ரன்கள்), மென்டிசும் (46 ரன்கள்) 71 ரன்கள் வரை விக்கெட்டை பறிகொடுக்காமல் ஆடி இலங்கை அணிக்கு நல்லதொரு தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். ஆனால் அதன் பிறகு ஆடவந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 133 ரன்களுக்கு இலங்கை அணி சுருண்டது. நியூஸிலாந்து அணியின் சார்பில் டிம் சவுதி 4 விக்கெட்களையும், வாக்னர் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

வெற்றிபெற 189 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த நியூஸிலாந்து அணி 11 ரன்களை எடுப்பதற்குள் லாதம் (4 ரன்கள்), கப்டில் (1 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆனால் அதன் பிறகு வில்லியம்சன் ஒருபுறத்தில் நிலைத்து விளையாடி நியூஸிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டார். அவருக்கு துணையாக டெய்லர் (35 ரன்கள்), மெக்கல்லம் (18 ரன்கள்) ஆகியோர் ஆடினர். நேற்று ஆட்டநேர இறுதியில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 142 ரன்களை எடுத்திருந்தது. வில்லியம்சன் 78 ரன்களுடனும், வால்டிங் ரன் ஏதும் எடுக்காமலும் ஆடிக்கொண்டிருந்தனர். இலங்கை அணியின் சார்பில் சமீரா 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆட்டத்தின் 4-வது நாளான இன்று நியூஸிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 47 ரன்களை எடுக்கவேண்டும். அந்த அணியின் கைவசம் 5 விக்கெட்கள் இருப்பதால் இந்த ரன்களை எளிதில் எடுக்கமுடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT