கடந்த 2 வாரங்களுக்கு முன் பெற்ற தாயை இழந்த நிலையில், நேற்று உடன்பிறந்த சகோதரியையும் இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி கரோனா தொற்றால் இழந்துள்ளார்.
கர்நாடக மாநிலம் சிக்மகளூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேதா கிருஷ்ணமூர்த்தியின் சகோதரி வத்சலா சிவக்குமார் (வயது 45) நேற்று இரவு உயிரிழந்தார். கடந்த சில நாட்களாக வத்சலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்ட நிலையில், நேற்று திடீரென உயிரிழந்தார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான வேதா கிருஷ்ணமூர்த்தி கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, அதாவது ஏப்ரல் 24-ம் தேதிக்கு முன்பு தனது தாய் செலுவம்மா தேவியை (வயது 67) கரோனா தொற்று பாதிப்பால் இழந்தார். அந்த சோகத்தின் சுவடு மறைவதற்குள் தனது உடன்பிறந்த சகோதரியையும் வேதா இழந்துள்ளார்.
இந்திய அணியின் ஆல்ரவுண்டரான வேதா கிருஷ்ணமூர்த்தி 48 ஒருநாள் போட்டிகள், 76 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
கடந்த மாதம் 24-ம் தேதி தனது தாயை இழந்தபின் வேதா கிருஷ்ணமூர்த்தி ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், “எனக்கு ஆறுதல் தெரிவித்து அனைவரும் அனுப்பிய செய்திகளுக்கு நன்றி. என் தாய் இல்லாமல் என் குடும்பத்தை நினைத்துப் பார்ப்பது கடினம்.
இப்போது நான் என் சகோதரிக்காக பிரார்த்திக்கிறேன். அவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார். நான் கரோனா பரிசோதனை செய்து கொண்டதில் எனக்கு நெகட்டிவ் வந்தது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னுடைய பிரார்த்தனைகளைத் தெரிவிக்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.
வேதா கிருஷ்ணமூர்த்தியின் நெருங்கிய உறவினர் மல்ஹோத்ரா கூறுகையில், “ வேதாவின் குடும்பத்தில் அவரின் தந்தை, சகோதரர், 2-வது சகோதரி ஆகியோர் சிக்மகளூருவில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள கடூரில் வசிக்கின்றனர். அவர்கள் அனைவருக்குமே கடந்த மாதம் கரோனா தொற்று ஏற்பட்டது.
வேதாவின் தாய்க்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் காலமானார். கடந்த சில வாரங்களுக்குமுன் தனது குடும்பத்தினரைச் சந்தித்துவிட்டு திரும்பிய வேதாவுக்கும் கரோனா அறிகுறிகள் இருந்தன. அதன்பின் வேதா தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்ததில் கரோனா நெகட்டிவ் என வந்தது. அதன்பின் இதுவரை அவரின் குடும்பத்தினரை வேதா சந்திக்க முடியவில்லை” எனத் தெரிவித்தார்.