சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 21-ம் தேதி மும்பையில் ஒரே ஹோட்டலில்தான் சிஎஸ்கே அணியினரும், கொல்கத்தா அணியினரும் தங்கி இருந்தனர். இதில் கொல்கத்தா அணியின் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த வீரர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜிக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அனைத்து வீரர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் மைக் ஹசிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிடிஐ வெளியிட்ட செய்தியில், ''மைக் ஹசிக்கு கரோனா பரிசோதனை செய்ததில், அவருக்குத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. மீண்டும் சோதனைக்கு அனுப்பியதில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, வீரர்கள் அடுத்தடுத்து கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதையடுத்து, 2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 தொடர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.