விளையாட்டு

ஷிகர் தவான், புஜாரா, கம்பீர் அரைசதம்: இந்தியா சிறப்பான துவக்கம்- 333 ரன்கள் குவிப்பு

செய்திப்பிரிவு

லீசெஸ்டர் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடி வரும் முதல்3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட் செய்து முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 333 ரன்கள் எடுத்துள்ளது.

முரளி விஜய் 3 பவுண்டரிகளுடன் 51 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ராப்சனிடம் கேட்ச் கொடுத்து அயர்லாந்து என்பவரது பந்து வீச்சில் அவுட் ஆனார்.

முதல் விக்கெட்டுக்காக தவானும், விஜய்யும் இணைந்து 46 ரன்கள் சேர்த்தனர். அவர் அவுட் ஆனவுடன் புஜாரா இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கவுதம் கம்பீர் களமிறங்கினார். தவான் நன்றாக சற்று பாசிடிவ் அணுகுமுறையுடன் ஆடி 100 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அவர் ரிட்டையர்ட் ஹர்ட் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் பொதுவாக இதுபோன்ற ஆட்டங்களில் அனைவருக்கும் பேட்டிங் வாய்ப்பு வரவேண்டுமென்று டச் எடுத்துக் கொண்டு பேட்ஸ்மென்கள் உள்ளே செல்வதுண்டு. அவர் அப்படித்தான் சென்றாரா அல்லது சிறு காயம் ஏதும் ஏற்பட்டதா என்று தெரியவில்லை.

தனது 60 ரன்களில் அவர் 12 அபாரமான பவுண்டரிகளை அடித்தார். 2வது விக்கெட்டுக்காக 116 ரன்கள் சேர்க்கப்பட்டது. தவான், கம்பீர் தடுமாற்றமில்லாமல் ஆடி வந்தனர். கம்பீர் 101 பந்துகளில் 7 பவுண்டரிகள் உதவியுடன் 54 ரன்கள் எடுத்து ரிட்டையர்ட் ஆனார்.

கோலி களமிறங்கி 3 பவுண்டரிகளுடன் 49 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து தாகூர் என்பவரது பந்து வீச்சில் பவுல்டு ஆனார்.

புஜாராவும் தன் பங்கிற்கு சிறப்பாக விளையாடி 98 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்து ரிட்டையர்ட் ஆனார். அதன் பிறகு ரோகித் சர்மா, அஜின்கியா ரஹானே ஜோடி சேர்ந்து விக்கெட்டை இழக்காமல் ஆடி வந்தனர். இருவரும் இணைந்து 5வது விக்கெட்டுக்காக 74 ரன்களை முதல் நாள் ஆட்ட முடிவில் சேர்த்து ஆடி வருகின்றனர்.

ரஹானே 77 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 47 ரன்களை எடுத்து ஆடி வர, ரோகித் சர்மா கொஞ்சம் கூடுதல் ஆக்ரோஷத்துடன் ஆடி 64 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சர் உதவியுடன் 43 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றார்.

ரோகித் சர்மா ராபர்ட் சாயெர் என்ற ஆஃப் பிரேக் பவுலரை சிக்ஸ் அடித்தார். இந்த இன்னிங்ஸின் முதல் சிக்ஸ் இது. நாளை ஆட்டத்தின் 2வது நாள்.

SCROLL FOR NEXT