விளையாட்டு

விளையாட்டாய் சில கதைகள்: பிராட்மேனைச் சந்தித்த தியான் சந்த்

பி.எம்.சுதிர்

கிரிக்கெட் போட்டியின் பிதாமகனாக கருதப்படும் டான் பிராட்மேனும், ஹாக்கி விளையாட்டின் தவப்புதல்வரான தியான் சந்தும் பரஸ்பரம் சந்தித்துக்கொண்ட நாள் என்ற பெருமை மே 2-ம் தேதிக்கு உள்ளது. 1935-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்திய ஹாக்கி வீரரான தியான் சந்த் மீது பிராட்மேனுக்கு மிகப்பெரிய மரியாதை இருந்தது. “கிரிக்கெட்டில் ரன்களைக் குவிக்கும் வேகத்தில் ஹாக்கி போட்டிகளில் தியான் சந்த் கோல்களை அடிக்கிறார்” என்று பிராட்மேன் ஒருமுறை தியான் சந்தைப் புகழ்ந்துள்ளார்.

இந்தச் சூழலில் 1936-ம் ஆண்டு பெர்லின் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக, 1935-ம் ஆண்டு இந்திய ஹாக்கி அணி, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் பெர்த் நகரில் நடந்த போட்டியில் இந்திய அணி 11-2 என்ற கோல்கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்றது. இப்போட்டியில் தியான் சந்த் 6 கோல்களை அடித்தார்.

இதற்கு அடுத்த போட்டி அடிலெய்ட் நகரில் நடைபெற்றது. அப்போது டான் பிராட்மேனை சந்திக்க தியான் சந்த் விரும்பியுள்ளார். இந்திய ஹாக்கி அணியின் துணை மேலாளராக இருந்த பங்கஜ் குப்தாவிடம் அவர் இதைத் தெரிவித்துள்ளார். அவர் அடிலெய்ட் நகரின் மேயராக இருந்த சர் ஜொனாதன் கெயினிடம் இதைக் கூற, அவர் பிராட்மேனிடம் அனுமதி கேட்டுள்ளார். பிராட்மேன், தியான் சந்தின் ரசிகர் என்பதால் இதற்கு உடனடியாக சம்மதம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அடிலெய்ட் நகரின் டவுன் ஹாலில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. இருவரும் நீண்டநேரம் பேசியுள்ளனர். இருவரின் ஆட்டத் திறனையும் பரஸ்பரம் வெகுவாகப் புகழ்ந்துள்ளனர். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த இரு உச்ச நட்சத்திரங்களின் சந்திப்பை யாரும் அப்போது படம் எடுக்கவில்லை.

SCROLL FOR NEXT