டெல்லி டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று 57/4 என்று தடுமாறிய இந்திய அணியை விராட் கோலி, அஜிங்கிய ரஹானே ஆகியோர் அபாரமாக விளையாடி வலுவான நிலைக்கு மீட்டுள்ளனர்.
3-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்துள்ளது. ஆட்ட முடிவில் விராட் கோலி 83 ரன்களுடனும், ரஹானே 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தென் ஆப்பிரிக்காவைக் காட்டிலும் 403 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
மோர்னி மோர்கெல் மீண்டும் அபாரமான ஒரு பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளையும் இம்ரான் தாஹிர் 1 விக்கெட்டையும் கைப்பற்ற இந்தியா 57/4 என்று சரிவு கண்டது. ஆனால் அதன் பிறகு விராட் கோலி, ரஹானே ஒரு பழைய பாணி டெஸ்ட் கிரிக்கெட்டை வெளிப்படுத்தினர். இருவரும் இணைந்து ஆட்டமிழக்காமல் 133 ரன்களை 49.5 ஓவர்களில் சேர்த்து களத்தில் நிற்கின்றனர்.
இன்று காலை மோர்னி மோர்கெல் 2 தொடர்ச்சியான அற்புத பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்த இந்தியா 8/2 என்று தொடங்கியது. ஆனால் முரளி விஜய்க்கு தீர்ப்பு எதிராக அமைந்தது, மோர்னி மோர்கெல் வீசிய எகிறு பந்து ஒன்று உள்ளேயும் வர அவர் இயல்பூக்கப் பாதுகாப்புணர்வுடன் மட்டையை உயர்த்தினார் பந்து அவரது ஆர்ம் கார்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் செல்ல அவர் பிடிக்க அவுட் தீர்ப்பளிக்கப்பட்டது. குமார் தர்மசேனாவின் அவுட் இது. ஆனால் முரளி விஜய் தீர்ப்பை எதிர்த்தது ஆட்ட நடுவர் பார்வைக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இது மோர்கெலின் 3-வது ஓவரின் கடைசி பந்து, மீண்டும் அவர் தனது 4-வது ஓவரின் முதல் பந்தில் 3-ம் நிலையில் இறங்கிய ரோஹித் சர்மாவை பவுல்டு செய்தார். பந்து ஆஃப் அண்ட் மிடிலில் பிட்ச் ஆகி ஆஃப் ஸ்டம்ப் நோக்கி ஸ்விங் ஆனது ரோஹித்திற்கு இந்தப் பந்து அதிகபட்சம். அவரால் ஒன்றும் செய்ய முடியாது என்பது பலரும் அறிந்ததே.
ஷிகர் தவண் அளவுக்கதிகமான எச்சரிக்கையுடன் ஆடினார் இதனால் கைல் அபாட் மற்றும் இம்ரான் தாஹிர் பந்துகளில் கூட அடி வாங்க நேரிட்டது. 85 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த நிலையில் மோர்னி மோர்கெலின் ரவுண்ட் த விக்கெட் யார்க்கருக்கு ஸ்டம்ப்களை இழந்தார். விளையாட முடியாத ஒரு யார்க்கராகும் அது.
தவணின் தவிப்பான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 3 ஓவர்களுக்குப் பிறகு புஜாரா 28 ரன்களில் இம்ரான் தாஹிரின் ஓரளவுக்கு பிளாட்டான, வேகமான லெக்ஸ்பின் பந்துக்கு முன்னால் வந்து ஆடாமல் பின்னால் சென்று ஆட முயன்றார் பந்து மட்டையைக் கடந்து பவுல்டு ஆனது. புஜாராவின் உத்தி கடும் ஐயங்களை எழுப்புவதாக அமைந்தது, அவர் எந்தப் பந்துக்கும் முழுதும் முன்னால் வருவதில்லை, முழுதும் பின்னால் செல்வதுமில்லை, இது அவரது தன்னம்பிக்கையின்மையின் வெளிப்பாடு என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
57/4 என்ற நிலையில் கோலி, ரஹானே இணைந்தனர். இவர்கள் அனாயசமாகவே ஆடினர். ரஹானேவுக்கு சில பந்துகள் பிரச்சினைகளைக் கொடுத்தன. ஆனால் அவர் அதனை எதிர்கொண்டு மீண்டார். தென் ஆப்பிரிக்கா பவுலர்கள் இவர்களை சுதந்திரமாக ரன் எடுக்க அனுமதிக்கவில்லை. ஆனாலும் இருவரும் பொறுமை காத்து 133 ரன்களை இதுவரை சேர்த்துள்ளனர்.
விராட் கோலி, இம்ரான் தாஹிரிடம் அவுட் என்று நடுவர் ஆக்சன்போர்ட் தீர்ப்பளித்தார். பந்து கோலியின் மட்டையில் படவில்லை என்பது ஒருபுறமிருக்க, நோ-பாலா என்று சரிபார்க்கப்பட்ட போது அது நோ-பால் என்று தெரியவர அவர் தப்பித்தார், நோ-பால் சந்தேகம் வரவில்லையெனில் கோலியும் நடையைக் கட்டியிருப்பார். கோலியும் சில வார்த்தைகளை முணுமுணுத்தார்.
ஆட்ட முடிவில் 10 பவுண்டரிகளுடன் கோலி 83 ரன்கள் எடுத்தும், 5 பவுண்டரிகளுடன் ரஹானே 52 ரன்கள் எடுத்தும் விளையாடி வருகின்றனர். இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்து 403 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.