கடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 21 பந்துகளில் 11 ரன்களை எடுத்த மோசமான இன்னிங்ஸ் இன்னமும் தன் மனதை விட்டு அகலவில்லை என்று கூறுகிறார் யுவராஜ் சிங்.
மிர்பூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் விராட் கோலி 58 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 77 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். ஆனால் யுவராஜ் சிங் 21 பந்துகளைச் சந்தித்து வெறும் 11 ரன்களை மட்டுமே எடுத்ததால் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தாலும் 130 ரன்களையே எடுத்தது. இதனை சங்கக்காராவின் அரைசதம் மூலம் இலங்கை எளிதில் எட்டி வெற்றி பெற்று உலக சாம்பியன் பட்டம் வென்றது.
யுவராஜ் சிங்கின் இந்த இன்னிங்ஸ் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டதோடு, அவர் இந்திய அணியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது: “2014-ல் நான் சரியாக இன்னிங்ஸை முடிக்க முடியவில்லை. இறுதிப் போட்டியில் மோசமான இன்னிங்ஸாக அமைந்தது, அதனை என்னால் மறக்க முடியவில்லை, அது இன்னமும் என் நினைவில் இருக்கிறது. அதன் பிறகு நான் உண்மையில் எனது பேட்டிங், பீல்டிங், உடற்தகுதியில் கடினமாக உழைக்க வேண்டியதாயிற்று.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இதைத்தான் கவனத்துடன் செய்து வருகிறேன். வரும் உலகக்கோப்பையில் இதற்கான பலன்கள் வரும் என்று உறுதியாக நம்புகிறேன். 2007-ம் ஆண்டு டி20 உலக சாம்பியன்களானோம், அதன் ஒவ்வொரு துளியையும் நாங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம். எங்களுக்காக நாடே உற்சாகம் அடைந்தது. எனவே 2011 உலகக்கோப்பைக்கு பிறகு உள்நாட்டில் நடக்கும் டி20 உலகக் கோப்பையை மீண்டும் வெல்ல முடிந்தால் அது அனைவருக்குமான மிகப்பெரிய வெற்றியாக அமையும்”
இவ்வாறு கூறினார் யுவராஜ் சிங்.