அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் தமிழக வீரர் நடராஜன் ட்விட்டரில் பதிவிட்ட படம். 
விளையாட்டு

தமிழக வீரர் நடராஜனுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை முடிந்தது: பிசிசிஐ, ரசிகர்களுக்கு நன்றி

பிடிஐ

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரும், தமிழக வீரருமான டி.நடராஜனுக்கு இன்று முழங்கால் அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.

ஐபிஎல் டி20 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த நடராஜன், 2 போட்டிகளில் மட்டுமே ஆடினார். அதன்பின் முழங்கால் வலி காரணமாக தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

நடராஜனின் காயத்தை ஆய்வு செய்த பிசிசிஐ மருத்துவக் குழுவினர் அவருக்கு முழங்காலில் சிறிய அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். அதன்படி இன்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.

அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்ததற்கு பிசிசிஐ, மருத்துவக் குழுவினருக்கு தமிழக வீரர் நடராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

நடராஜன் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், “இன்று நான் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். என்னைக் கனிவுடன் கவனித்துக் கொண்ட மருத்துவக் குழுவினர், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி. பிசிசிஐ அமைப்புக்கும், நான் குணமடைய வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியப் பயணத்தில் ஒருநாள், டி20, டெஸ்ட் அனைத்திலும் நடராஜன் விளையாடியதை அடுத்து, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு முன்பாக நடராஜனின் காலில் வலி ஏற்பட்டது.

அதன்பின் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் சிகிச்சையும், பயிற்சியும் நடராஜன் எடுத்துவிட்டு இங்கிலாந்து ஒருநாள் தொடருக்குத் திரும்பினார். ஆனாலும், முழுமையாக குணமடையாமல்தான் அணியில் இடம் பெற்றிருந்தார்.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக 2 போட்டிகளில் மட்டும் விளையாடிய நிலையில் நடராஜனின் முழங்காலில் வலி அதிகரித்தது. இதையடுத்து தொடரிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT