சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் | படம் உதவி ட்விட்டர் 
விளையாட்டு

மணிஷ் பாண்டேவை நீக்கியது கடினமான முடிவு; அதை தேர்வாளர்கள் எடுத்தனர்: டேவிட் வார்னர் வெளிப்படை

ஏஎன்ஐ

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ப்ளேயிங் லெவனிலிருந்து மணிஷ் பாண்டேவை நீக்கியது கடினமான முடிவு. இந்த முடிவை தேர்வாளர்கள்தான் எடுத்தனர் என்று கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 20-வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. 160 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்ததையடுத்து ஆட்டம் டையில் முடிந்தது. அதன்பின் நடந்த சூப்பர் ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 7 ரன்கள் எடுத்தது, டெல்லி கேபிடல்ஸ் அணி 8 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

சன்ரைசர்ஸ் அணியைப் பொருத்தவரை அந்த அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அளித்த பேர்ஸ்டோவை சூப்பர் ஓவரில் ஆடவைக்காமல் வார்னர் தவறு செய்துவிட்டார் அதற்கான விலையையும் சன்ரைசர்ஸ் அணி கொடுத்துவிட்டது. பேர்ஸ்டோவின் பேட்டிங் ஆய்வுகளின்படி, களத்தில் நிற்கும்போது ஒவ்வொரு 2.5 பந்துகளுக்கும் பவுண்டரி அடிக்கும் திறமை பெற்றவர்.

இந்த ஆட்டத்தில் இரு அணிகள் சார்பில் அடிக்கப்பட்ட 8 சிக்ஸரில் பேர்ஸ்டோ மட்டுமே 4 சிக்ஸர் அடித்தார், 3 பவுண்டரிகள் அடித்துள்ளார். அவரை சூப்பர் ஓவரில் களமிறக்காமல் வார்னர் களமிறங்கியது தவறு.

சன்ரைசர்ஸ் அணியில் வெற்றிக்காக கடைசிவரை போராடியவர் வில்லியம்ஸன் மட்டும்தான் அவருடன் பார்ட்னர்ஷிப் அமைக்க ஒரு பேட்ஸ்மேன் நிலைத்திருந்தாலே ஆட்டம் வெற்றியை நோக்கி நகர்ந்திருக்கும். மணிஷ் பாண்டேவை இந்த ஆட்டத்தில் சேர்க்காமல் பெஞ்சில் அமரவைத்ததும் மிகப்பெரிய தவறு.

சிறந்த பேட்ஸ்மேனான மணிஷ் பாண்டே மேட்ச் ஃபினிஷர் இல்லை என்றாலும், களத்தில் நிலைத்து ஆடக்கூடியவர், நல்ல பார்ட்னர்ஷிப் பில்ட் செய்யக்கூடியவர். இந்த ஆட்டத்தில் வில்லியம்ஸனுடன் பாண்டே இருந்திருந்தால், ஆட்டம் வேறு திசையில் பயணித்திருக்கும்.

மணிஷ் பாண்டேவை நீக்கியது குறித்து சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்: மணிஷ் பாண்டேவை நீக்கியது மிகவும் கடினமான முடிவு என்பது என்னுடைய கருத்து. இந்த முடிவை நான் எடுக்கவில்லை. தேர்வாளர்கள்தான் எடுத்தார்கள். அனைத்து முடிவுகளையும் தேர்வுகளர்கள்தான் எடுக்கிறார்கள்.

மணிஷ் பாண்டேவுக்கு பதிலாக வந்த விராட் சிங் நல்ல பேட்ஸ்மேன்தான்.ஆ னால் சேப்பாக்கம் ஆடுகளம் கடினமானது, பேட்டிங் செய்வது சுலபமானது அல்ல. பவர்ப்ளேயில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். நடுவரிசையில் ஆடுகளம் இன்னும் கடினமாக மாறும் என்பதை அறிந்து கட்டுக்கோப்பாக வீசினர்.

மணீஷ் பாண்டே

விஜய் சங்கர் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தினார். டெல்லியை கட்டுப்படுத்தி சேஸிங் செய்யக்கூடிய இலக்கோடு எங்கள் பந்துவீச்சளர்கள் நிறுத்தினர். இலக்கை துரத்துகையில் பேர்ஸ்டோ நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தார், வில்லியம்ஸன் நடுவரிசையில் சிறப்பாக ஆடினார்.

ஆனால் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் வில்லியம்ஸனுக்கு துணையாக இன்னும் சிறப்பாக பேட் செய்திருக்கலாம். நடுவரிசை ஓவர்கள்தான் எங்களுக்கு சவலாக இருந்தது, டெல்லி அணி வீரர்களும் நன்றாகப் பந்துவீசினர்.

கிரிக்கெட்டில் ரன் அவுட் ஆவது இயல்பானது. அதிலும் உலகத் தரம்வாய்ந்த வீரர்கள் விளையாடும்போது, 10 முறையி்ல் 9 முறை ரன்அவுட் ஆகினாலும் இயல்புதான்

இவ்வாறு வார்னர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT