விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் மீண்டும் இடம்பெற யூசுப் பத்தான் விருப்பம்

பிடிஐ

அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை டி20 போட்டித் தொடரில் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற அதிரடி ஆல்ரவுண்டர் யூசுப் பத்தான் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 57 ஒருநாள் போட்டிகள், 22 டி20 போட்டிகளில் ஆடி தனது அதிரடியின் மூலம் இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் யூசுப் பத்தான். 2007 உலகக் கோப்பை பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவர் அடிக்கக் கடினமான வேகப்பந்து வீச்சாளரான மொகமது ஆசிப் பந்தை மேலேறி வந்து அடித்த சிக்சரை ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.

அதன் பிறகும் ஒருநாள் போட்டிகளில் சில முக்கிய இன்னிங்ஸ்களை ஆடினார். 2011 உலகக் கோப்பையில் இவர் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. இருப்பினும் 2-வது வாய்ப்புக்கு தகுதியான வீரரே யூசுப் பத்தான்.

ஒருநாள் போட்டிகளில் யூசுப் பத்தானின் ஸ்ட்ரைக் ரேட் 113.60, சர்வதேச டி20 போட்டிகளில் 146.58 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் கூறியிருப்பதாவது:

ரஞ்சி போட்டிகளில் சிறப்பாக ஆடிவருகிறேன். இந்த ஆண்டு ரஞ்சி போட்டிகளிலும் நன்றாக ஆடியுள்ளேன். டி20 கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் கொல்கத்தாவுக்காக ஐபிஎல் போட்டிகளில் நல்ல முறையில் பங்களிப்பு செய்துள்ளேன், நன்றாக பந்துவீசியும் வருகிறேன், விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டிகளில் 9-10 ஓவர்களை வீசிவருகிறேன். விக்கெட்டுகள் வீழ்த்துகிறேன், பேட்டிங்கிலும் பங்களிப்பு செய்து வருகிறேன். என்னைப் பொறுத்தவரையில் அனைத்தும் சரியான திசையில் செல்வதாகவே உணர்கிறேன்.

எனவே உலகக் கோப்பை டி20 தொடரில் அணியில் தேர்வு செய்யப்படுவேன் என்று எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து சிறப்பாக ஆடினால் எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்றே நம்புகிறேன்.

என்னிடம் நிறைய கிரிக்கெட் திறமைகள் உள்ளன. இப்போதைக்கு சிறப்பாக ஆடுவது தவிர வேறு கவனங்கள் இல்லை.

விராட் கோலி சில போட்டிகளிலேயே கேப்டன்சி செய்தாலும் சிறப்பாக செயல்படுகிறார், அவர் ஒரு நல்ல தலைவர், தனது அணுகுமுறையில் தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறார். களத்தில் ஆவேசமாக செயல்படுகிறார். அவர் அணி வீரர்களுக்கும் உதவுகிறார் இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல அறிகுறியாகும்.

நான் எனது பந்துவீச்சில் முன்னேற்றமடைய கடுமையாக பயிற்சி செய்து வருகிறேன், பந்துவீச்சு மட்டுமல்ல பேட்டிங், பீல்டிங்கும் எனது கவனத்தில் உள்ளது.

இவ்வாறு யூசுப் பத்தான் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT