தமிழக வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த வருமான நடராஜன் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
நடராஜனுக்கு முழுங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார், அவர் சிகிச்சைக்காக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு செல்ல உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவி்க்கின்றன.
நடப்பு ஐபிஎஎல் டி20 சீசனில் சன்ரைசர்ஸ் அணியில் 2 ஆட்டங்களில் மட்டுமே நடராஜன் விளையாடியிருந்தார். கடந்த சில நாட்களுக்குமுன் பேட்டி அளித்த சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர், ஆலோசகர் விவிஎஸ் லட்சுமண் ஆகியோர் நடராஜன் விரைவில் குணமாகிவிடுவார் என நம்பிக்கை தெரிவித்திருந்தனர். ஆனால், முழங்கால் காயத்திலிருந்து முழுமையாக நடராஜன் குணமாகவில்லை என்பதால் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில் “ நடராஜனுக்கு ஏற்பட்ட முழுங்கால் காயத்திலிருந்து அவர் முழுமையாக குணமாகவில்லை. என்சிஏவில் ஏற்கெனவே சிகிச்சை பெற்றுத் திரும்பிய நடராஜன் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டி20,ஒருநாள் போட்டியில் விளையாடினார். இருப்பினும் அவர் 100 சதவீதம் தகுதியாக இல்லை. ஐபிஎல் தொடரில் 2 போட்டிகளில் பங்கேற்றவுடன் மீண்டும் முழங்கால் வலி ஏற்பட்டுள்ளதால், அவர் சிகிச்சைக்காக பெங்ளூரு என்சிஏவுக்கு செல்ல உள்ளார்” எனத் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் நடராஜனுக்கு ஏற்பட்ட காயம் குறித்து அறியஅவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால், ஸ்கேன் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றால், அணியின் பயோ-பபுளை விட்டு வெளியேற வேண்டியது இருக்கும். மீண்டும் அணிக்குள் வர வேண்டுமென்றால், 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆதலால், நடராஜன் தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் விளையாடுவது சாத்தியமில்லை எனத் தெரிகிறது.