கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் ஆன்ட்ரூ ரஸல் ஏமாற்றப்பட்டார். அவருக்கு இந்தப் போட்டியில் கிடைத்த வாய்ப்பு போன்று இனிமேல் அடிக்கடி கிடைக்காது என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனுமான கவுதம் கம்பீர் தெரிவித்தார்.
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் டி20 தொடரில் தொடர்ந்து 3-வது தோல்வியை மோர்கன் தலைையில் கொல்கத்தா அணி சந்தித்துள்ளது.
பவர்ப்ளே ஓவருக்குள் கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 31 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரஸல், தினேஷ் கார்த்திக், கம்மின்ஸ் மூவரும் சேர்ந்து ஆட்டத்தை கடைசி வரை இழுத்து வந்தனர்.
அதிலும் ரஸல் நேற்று களத்துக்கு வந்ததிலிருந்து சிஎஸ்கே வீரர்களின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். ஷர்துல் தாக்கூர் வீசிய ஒரே ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என 24 ரன்களைக் குவித்து 21 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
ஆனால், சாம் கரன் பந்துவீச்சில் இடது ஸ்டெம்ப்பை அதிகமாக வெளிக்காட்டி நின்று இருந்ததால், தேவையில்லாமல் போல்டாகி ரஸல் ஆட்டமிழந்தார்.
ரஸல் ஆட்டமிழந்தது குறித்து கொல்கத்தா அணியின் முன்னாள்கேப்டன் கவுதம் கம்பீர், கிரிக் இன்போ தளத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:
''ஆன்ட்ரூ ரஸலை ஏமாற்றி ஆட்டமிழக்கச் செய்துவிட்டார்கள். இதற்கு சிஎஸ்கே அணியைப் பாராட்டியே ஆக வேண்டும். ரஸலுக்கு ஃபீல்டிங் முழுவதையும் ஆஃப் சைடு நிறுத்திய சிஎஸ்கே அணி, ரஸலின் கவனத்தை ஆஃப் சைடு திருப்பி, லெக் ஸ்டெம்ப்பைத் தெரியவைத்து போல்டாக்கினர்.
ரஸலும் ஆஃப் சைடு வீசப்படும் பந்துக்குத்தான் தயாராக நின்றிருந்தார். ஷர்துல் தாக்கூரும் ஆஃப் சைடில் விலக்கியே ரஸலுக்கு வீசினார். இதைப் பின்பற்றியே சாம் கரனும் வீசினார். ஆனால், லெக் ஸ்டெம்ப்பை ரஸல் அதிகமாக வெளிக்காட்டிய நேரத்தில் சாம் கரன் திடீரென ஸ்விங் செய்தவுடன் ரஸல் விலகிக் கொள்ள போல்டாகியது.
ஏனென்றால், ரஸல் ஆஃப் சைடு வீசப்படும் பந்துக்குத்தான் தன்னைத் தயார் செய்திருந்தார். ஆனால், திட்டத்தை மாற்றி லெக் ஸ்டெம்ப்பை நோக்கி வீசி, ரஸலை சிஎஸ்கே அணி நன்கு ஏமாற்றிவிட்டது.
ரஸல் அடித்து ஆடிய விதம் மாஸ்டர் கிளாஸ். இன்னும் 4 ஓவர்கள் ரஸல் களத்தில் நின்றிருந்தால், ஆட்டம் வேறு மாதிரியாகச் சென்றிருக்கும். ரஸல் களத்தில் இருக்கும் வரை எந்த ஆஃப் ஸ்பின்னரும் பந்துவீச வரமாட்டார்கள் என எனக்குத் தெரியும்.
ரஸலைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். கொல்கத்தா அணியைத் தனி வீரராக நின்று வென்று கொடுக்கவும் முடியும், சதமும் அடிக்க முடியும். ஆனால், ஷாட்களைத் தேர்வு செய்வதில் சிக்கல் இருக்கிறது. ஏற்கெனவே தாக்கூர் ஓவரில் ரஸல் 24 ரன்களை விளாசி நல்ல ஃபார்மில் இருந்தார்.
ஆனால், தேவையில்லாமல் ஆட்டமிழந்தபின், ரஸல் நிச்சயம் ஓய்வறைக்குச் சென்றபின் தனக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பை, சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது கண்டும், அணிக்காக ஆட்டத்தை முடிக்க முடியாமல் போய்விட்டது நினைத்தும் வருத்தப்படுவார்.
ரஸல் களத்தில் நின்றிருந்தால், ஆட்டம் 17 ஓவர்களுக்குள் முடிந்திருக்கும். இதுபோன்ற வாய்ப்புகள் ரஸலுக்கு அடிக்கடி கிடைக்காது. ரஸல் ஒருவேளை வாய்ப்பைப் பயன்படுத்தி இருந்தால், கொல்கத்தா அணி வென்றிருக்கும்''.
இவ்வாறு கவுதம் கம்பீர் தெரிவித்தார்.