மும்பையில் நடந்த ஆட்டத்தில் பனிப்பொழிவு இருந்திருந்தால், நிச்சயம் சேஸிங் செய்து, சிஎஸ்கே அணியை வீழ்த்தியிருப்போம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்ஸன் தெரிவித்தார்.
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 12-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 வி்க்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது. 189 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்து 45 ரன்களில் தோல்வி அடைந்தது.
ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணி வலுவாகத்தான் இருந்தது, 87 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ராஜஸ்தான் அணி அடுத்த 8 ரன்களைச் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது தோல்வியின் பிடியில் சிக்கியது.
ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்ஸன் பஞ்சாப் அணிக்கு எதிராக சதம் அடித்தார். அதன்பின் நடந்த இரு போட்டிகளிலும் வழக்கம் போல் நிலையற்ற பேட்டிங்கை வெளிப்படுத்தி ஆட்டமிழந்தார். சிஎஸ்கேவுக்கு எதிரான இந்தஆட்டத்திலும் சாம்ஸன் ஒரு ரன்னில் வெளியேறினார்.
இந்த போட்டியின் தோல்விக்குப்பின் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்ஸன் அளித்த பேட்டியில் கூறியதாவது:
இதே மும்பை வான்ஹடே மைதானத்தில் நாங்கள் இதற்கு முன் விளையாடிய போட்டியை தொலைக்காட்சியில் பார்த்தோம், பல அணிகள் ஆடிய போட்டியையும் பார்தோம். அதில் டாஸ் வென்று பேட்டிங் செய்வதைவிட, முதலில் பந்துவீசுவதுதான் சிறந்ததாக தெரிந்தது. அதனால்தான் நான் பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தேன். சிஎஸ்கே அணியை 180 ரன்களுக்குள் சுருட்ட முயன்றோம், அந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்திய எங்களின் பந்துவீ்ச்சு சிறப்பாகவே இருந்தது.
என்னைப் பொருத்தவரை பனிப்பொழிவு இருந்திருந்தால், ஆடுகளம் இன்னும் நன்றாக இருந்திருக்கும், சேஸிங் செய்வதும் எளிதாக மாறியிருக்கும், சிஎஸ்கே அணியை வீழ்த்தியிருப்போம்.
சேஸிங் செய்வதற்கு ஏற்ற ஸ்கோராகத்தான் இருந்தது. ஆனால், நடுப்பகுதியில் நாங்கள் அதிகமான விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். நடுப்பகுதி ஓவரில் பந்து இவ்வளவு அதிகமாகச் சுழலும் என்று நான் நினைக்கவில்லை. பனிப்பொழிவு இல்லாததால்தான் பந்து டர்ன்ஆகியது
ஐபிஎல் தொடரைப் பொருத்தவரை சில பெரிய ஷாட்களை அடித்தால்தான ஸ்கோர் செய்ய முடியும். நான் இந்த அளவு வளர்ந்ததற்கு அதுபோன்ற பெரிய ஷாட்களை அடித்ததுதான் காரணம் என முன்பே தெரிவித்திருந்தேன், ஷாட்களை அடிப்பதில் அதிகமான பிரயத்தனம் செய்வேன்.
அதனால்தான் என்னால் முதல் ஆட்டத்தில் சதம் அடிக்க முடிந்தது. ஆதலால், நாம் விளையாடும்போது அன்றைய நாள் எவ்வாறு இருக்கிறது, எந்தவிதமான மனநிலையில் இருக்கிறீர்கள், ஆடுகளம் ஆகியவற்றைப் பொருத்து ஆட்டம் மாறுபடும்.
ஆதலால், நான் வழக்கமாக ஆடும் பெரிய ஷாட்களை கட்டுப்படுத்தப் போவதில்லை. என்னுடைய வழக்கமான, இயல்பான ஆட்டத்திலேயேதான் விளையாடுவேன், இதுபோன்று பேட் செய்வதைத்தான் விரும்புகிறேன். இதில் பல தோல்விகள் வந்துள்ளன என்பதை ஏற்கிறேன். ஆனால் அதைப்பற்றி கவலைப்படவில்லை, நான் விரைவாக ஆட்டமிழப்பதையும் பற்றியும் கவலையில்லை. ஆனால்,நிச்சயமாக, என்னுடைய அணியின் வெற்றிக்காக அடுத்து வரும் போட்டிகளில் என்னுடைய பங்களிப்பு இருக்கும்
இவ்வாரு சாம்ஸன் தெரிவித்தார்.