ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ஆட்டத்தின் 2-வது பகுதியில் பனிப்பொழிவு காரணமாக 2 ஓவர்களுக்கு ஒரு முறை புதிய பந்தை பயன்படுத்த வேண்டும் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கே.எல்.ராகுல் (61), மயங்க் அகர்வால் (69) ஆகியோரின் அதிரடியால் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 196 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. இருப்பினும் ஷிகர் தவண் 49 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 92 ரன்களும், இறுதிக்கட்டத்தில் மார்கஸ் ஸ்டாயினிஸ் 13 பந்துகளில் 27 ரன்களும் விளாச டெல்லி அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறும்போது, "பனிப்பொழிவு அதிகம் உள்ளது. வான்கடே மைதானத்தில் 2-வதாக பந்து வீசுவது எப்போதுமே சவாலானது. இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு நாங்கள் எப்போதும் தயாராக முயற்சிக்கிறோம். ஆனால் போட்டிச் சூழ்நிலைகளில் அது கடினமாகிவிடுகிறது. பனிப்பொழிவு இருப்பதால் 2 ஓவர்களுக்கு ஒரு முறை பந்தை மாற்ற வேண்டும்.
தோல்வியடைந்த பக்கத்தில் நாங்கள் இருப்பதால் இதை நான் கூறவில்லை. நான் இரு முறை பந்தை மாற்றுமாறு நடுவர்களிடம் கேட்டேன். ஆனால் அது விதிமுறைகளில் இல்லை. வெற்றி பெற்றிருந்தால் எனது பிறந்த நாளில் இனிமையானதாக இருந்திருக்கும். ஆனாலும் எங்களுக்கு இன்னும் அதிக ஆட்டங்கள் உள்ளன” என்றார்.