நடிகர் விவேக் மறைவுக்கு தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ரவிச்சந்திர அஸ்வின், டி நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரும், சின்னக் கலைவானர் என்று அழைக்கப்பட்ட நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையி்ல் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இதயத்தில் உள்ள அடைப்பைக் கண்டுபிடிக்க ஆஞ்சியோகிராம் சிகிச்சையும், இதயம் சீராக இயங்க எக்மோ கருவி சிகிச்சையும் அளி்க்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட மாரடைப்பால் விவேக் காலமானார்.
நடிகர் விவேக் காலமான செய்தி கேட்டு திரையுலகில் ஏராளமானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். கரோனா வைரஸ் பரவல் காரணமாக நேரில் வர முடியாத பல நடிகர்கள், நடிகைகள், தங்கள் கண்ணீர் அஞ்சலியை காணொலி மூலம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் ரவிச்சந்திர அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், டி நடராஜன் ஆகியோர் தற்போது ஐபிஎல் டி20 தொடரில் பல்வேறு நகரங்களில் விளையாடி வருகின்றனர். நடிகர் விவேக்கின் மரணத்துக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத சூழலில் இருப்பதால், இந்த மூவரும் தங்களின் இரங்கலை ட்விட்டர் வாயிலாகத் தெரிவித்துள்ளனர்.
ரவிச்சந்திர அஸ்வின் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ நடிகர் விவேக்கின் குடும்பத்தாருக்கும் அவரை இழந்துவாடும் ரசிகர்களுக்கும் என்னுடையஆழ்ந்த இரங்கல்கள். இந்த உலகில் நீ்ங்கள் இல்லை என்பதை நம்பமுடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் சுந்தர் ட்வி்ட்டரில் பதிவிட்ட கருத்தில் “ நடிகர் விவேக் மரணச் செய்தி கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன், பேச வார்த்தைகள் இல்லை. அனைவரையும் சிரிக்கவைத்து , மகிழ்வித்த அபாரமான சக்தி கொண்டவர் நீங்கள், என் சிறுவயது காலத்திலருந்தே உங்களை நினைவில் வைத்திருக்கிறேன்.
உங்களின் சிறந்த பண்புகள், சிறந்த குணங்கள், பெருந்தன்மை போன்றவை நீங்கள் வைத்த மரம் மூலம் நிலைத்திருக்கும். உங்கள் குடும்பத்தாருக்கு தேவையான மனவலிமையை இறைவன் வழங்க பிரார்த்திக்கிறேன் “ எனத் தெரிவித்துள்ளார்.
டி நடராஜன் பதிவிட்ட இரங்கல் செய்தியி்ல் “ உங்களை இழந்து வாடுகிறோம் விவேக் சார்..ஆன்மா சாந்தியடையட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.