ஜூன் 25, 1983. இந்திய கிரிக்கெட் வரலாற்றின் பொன்னான நாள் என்று கருதப்படுகிறது. காரணம் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி பல நிபுணர்களின் கேலியை முறியடித்து உலக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்ற நாள்.
அந்த நாளை இதே ஜூன் 25-இல் நினைவு கூர்ந்துள்ளார் அப்போதைய கேப்டன் கபில் தேவ். கோ கிரிக்கெட் இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஒருநாள் போட்டி இந்த அளவுக்கு வளர்ச்சியுறும் என்று நான் அப்போது கருதவில்லை. உலகக் கோப்பை வெற்றி என்ற பெரிய சாதனை நிகழும்போது மாற்றங்கள் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்த முடியாது. மீண்டும் உலகக் கோப்பையை வெல்ல காலம் எடுத்தாலும் இந்திய ஒருநாள் கிரிக்கெட் வெற்றிகளின் முதல் படி அதுவே. அந்த கோப்பையை வென்ற பிறகே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கிரிக்கெட் வீரர்களின் பெயர்களைச் சூட்டத் தொடங்கினர்.
1983 வெற்றிக்கு பிறகு 1985-இல் ஆஸ்திரேலியாவில் மினி உலகக் கோப்பையில் வெற்றி, 2007 டி20 உலகக் கோப்பை வெற்றிகள் என்று கிரிக்கெட் இவ்வளவு வேகமாக வளர்ச்சியடையும் என்று நான் அப்போது நினைக்கவில்லை.
சவுரவ் கங்கூலி கேப்டன் பொறுப்பை ஏற்றவுடன் அனைத்து மாற்றங்களும் நிகழ்ந்தன, அயல்நாடுகளில் வெற்றி பெறத்தொடங்கினோம். நம்மிடையே, சச்சின், திராவிட், லஷ்மன், சேவாக், அனில் கும்ளே, ஹர்பஜன், ஜாகீர் கான் ஆகிய பொன்னான வீரர்கள் வந்தனர். அனைவரும் சேர்ந்து நாம் நிறைய வெற்றிகளைப் பெறத் தொடங்கினோம்.
அப்போது முதல் தெருவில் செல்லும் சாதாரண நபர் கூட இந்திய அணி இனி எந்த அணியையும் வெல்லும் என்று நம்பிக்கைக் கொள்ள தொடங்கினார்கள். இது ஒரு அழகான கதை.
எங்கள் காலத்தில் தொடரை எப்படி டிரா செய்வது என்பதே குறிக்கோளாக இருப்போம், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் அரிதாகவே ஏற்படும். இப்போது தொடரை வெல்ல வேண்டும் என்று முயற்சி செய்கிறோம், ஆனால் வெற்றிக்கனி கைகளுக்கு எட்டுவதில்லை. ஆனால் இது முக்கியமல்ல சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது உண்மையே.
என்றார் கபில் தேவ்.