சிஎஸ்கே அணிக்காக 200 டி20 போட்டிகளில் பங்கேற்றதை நினைக்கும் போது, எனக்கு கொஞ்சம் வயதாகிவிட்டதுபோன்ற உணர்வு வருகிறது என்று சென்னை சூப்பர் கிங்ஸ்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்தார்.
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அபாரமாகப் பந்துவீசிய சிஎஸ்கே வீரர் தீபக் சஹர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
இந்தப் போட்டி சிஎஸ்கே அணிக்காக தோனி விளையாடும் 200-வது போட்டியாக அமைந்தது. இந்த போட்டியின் வெற்றிக்குப்பின், தோனி அளித்த பேட்டியில் கூறியதாவது:
சிஎஸ்கே அணிக்காக 200 போட்டிகளில் பங்கேற்றது என்பது நீண்ட பயணம். இந்த நெடும் பயணம் என்னை சற்று வயதானவராக உணரச் செய்கிறது. கடந்த 2008ல் தென் ஆப்பிரிக்கா, துபாய், சென்னை என சிஎஸ்கேவுடன் என் பயணம் தொடங்கியது. ஆனால் இந்த முறை, மும்பை நாங்கள் விளையாடும் இடமாக இருக்கும் என ஒருபோதும் நினைக்கவில்லை.
சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் மறுவடிவமைப்புச் செய்யப்பட்டுள்ள ஆடுகளம் மீது எனக்கு மனநிறைவு இல்லை. ஆடுகளம் மறுவடிவமைப்புச் செய்யப்பட்டபின் சூழலுக்கு ஏற்ப மாறுவது கடினமாக இருப்பதாக உணர்கிறோம். ஆனால், மும்பை ஆடுகளம் சிறப்பாக இருக்கிறது. பந்து அதிகமாக ஸ்விங் ஆகவில்லை, பனிப்பொழிவு இல்லாததால், நன்றாகப் பந்து “சீம்” ஆனது.
தீபக் சஹர் சிறந்த டெத் பவுலராக உருமாறியுள்ளார், பந்துவீச்சில் முதிர்ச்சி தெரிகிறது. மற்ற பந்துவீச்சாளர்களைவிட இவரை அதிக விலைக்கு வாங்குவார்கள். பிராவோ கடைசி நேரத்தில் டெத் பவுலிங் வீசுவார் என்பதால்தான், தீபக் சஹருக்கு முன்கூட்டியே 4 ஓவர்களையும் முடித்துவிட்டேன், சஹரின் தாக்குதல் வலுவாக இருந்தது.
மொயின் அலியை தொடக்க வரிசையில் பேட் செய்ய வைக்க வேண்டும் என முடிவு செய்தோம். எங்களுக்கு கிடைத்த வளங்களை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முயல்கிறோம். பந்தை சரியான டைமிங்கில் அடித்துவிடக்கூடிய நல்ல பேட்ஸ்மேன், வலுவான ஷாட்களை ஆடக்கூடியவர் மொயின் அலி.
இவ்வாறு தோனி தெரிவித்தார்.