ரவிச்சந்திர அஸ்வின் : கோப்புப்படம் 
விளையாட்டு

அஸ்வினுக்கு ஓவர் கொடுக்காமல் இருந்தது தவறுதான்; டெல்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஒப்புதல்

பிடிஐ


ரவிச்சந்திர அஸ்வின் தனது ஓவரை முழுமையாக முடிக்கவிடாலும், கடைசியில் ஓவர் கொடுக்காமல் இருந்தது தவறுதான். ரிஷப்பந்திடம் இதுதொடர்பாக பேசுவேன் என்று தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 7வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்தது.

148 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டன. ரபாடா ஓவரில் 2 சிக்ஸர்களையும், டாம் கரன் வீசிய கடைசி ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மோரிஸ் வெற்றியைத் தேடித்தந்தார்.

இதில் டெல்லி கேபிடல்ஸ் வீரர் ரவிச்சந்திர அஸ்வினுக்கு ஒரு ஓவர் மீதம் இருந்தது. 3ஓவர்கள் வரைவீசிய அஸ்வின் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அருமையாக பந்துவீசியிருந்தார். ஆனால், அஸ்வினுக்கு வழங்காமல் டாம்கரனுக்கு வழங்கியது கடுமையாக ரிஷப்பந்த் கேப்டன்ஷிப் குறித்து சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் நடுப்பகுதியில் அஸ்வினுக்கு ஓவர்களை முழுமையாக வழங்கிமுடித்திருக்கலாம். ஆனால், ஸ்டாய்னிஷ்க்கு ஓவரை வழங்கினார் ரிஷப்பந்த்.

ஸ்டாய்னிஷ் ஓவரில் 15 ரன்களை குவித்தார் டேவிட் மில்லர். இதனால் 5 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் சேர்த்திருந்த ராஜஸ்தான் அணி, அந்த ஓவர் முடிவில் 78 ரன்களுக்கு உயர்த்திக் கொண்டது.

அஸ்வினுக்கு முழுமையாக ஓவர்களை வழங்காதது குறித்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப்பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் பதில் அளித்தாவது:

அஸ்வினுக்கு இந்த ஆட்டத்தில் முழுமையாக ஓவர்களைக் கொடுத்திருக்க வேண்டும். அஸ்வினுக்கு ஓவர் முழுமையாக வழங்காதது குறித்து நான் கேப்டன் ரிஷப்பந்திடம் பேசுவேன். அஸ்வின் மிகச்சிறப்பாகப் பந்துவீசினார். 3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். ஒரு பவுண்டரி கூட அடிக்கவிடாமல் நன்றாக பவுலிங் செய்திருந்தார்.

ஆனால், முதல்ஆட்டத்தில் தனது பந்துவீச்சை அடித்துவி்ட்டார்கள் என்பதால் வருத்தத்துடன் இருந்த அஸ்வின், அதன்பின் கடந்த 3 நாட்களாக தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டார், கடினமாக உழைத்தார், தனது பந்துவீச்சில் உள்ளகுறைகளைத் திருத்தினார். அதற்கு ஏற்றார்போல் அழகாகப் பந்துவீசினார்.

அஸ்வினுக்கு முழுமையாக ஓவர்களை வழங்காதது தவறுதான். எங்களின் தவறாக இருக்கலாம், இதுபற்றி பேசப்படும்.

நாங்கள் மோரிஸுக்கு ஸ்லாட்டில் அதிகமான பந்துகளை வீசிவிட்டோம், அதனால்தான் எளிதாக சிக்ஸர் அடிக்க முடிந்தது. மோரிஸுக்கு வீசிய பந்தில் சரியாக லைன் லென்த்தில் பந்து பிட்ச் ஆகவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். நீங்கள் போட்டியை ரீவைண்ட் செய்துபார்த்தால், மோரிஸுக்கு யார்கர் வீசியிருந்தால், அவரால் அடித்திருக்க முடியாது.

2-வது இன்னிங்ஸில் நாங்கள் பந்துவீசும்போது, பனிப்பொழிவு இருந்ததால், பந்துவீச்சாளர்களால் பந்தை இறுக்கமாகப் பிடிக்க முடியவில்லை. இதனால்தான் கடைசி நேரத்தில் பந்துவீச்சாளர்கள் கையிலிருந்து பந்து விலகி ஃபுல்டாஸாக மாறியதை பார்த்திருக்கலாம்.

13-வது ஓவர்வரை அனைத்தும் சிறப்பாகவே சென்றது. ஆனால், கடைசி 5 ஓவர்களில் நாங்கள் திட்டமிடலில் செய்த தவறுதான் ஆட்டம் கைவிட்டுப்போனது.

இவ்வாறு பாண்டிங் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT