இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. வெற்றிபெற 405 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை, 3 விக்கெட் இழப்புக்கு 109 ரன்களை எடுத்து தடுமாறி வருகிறது.
நியூஸிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டுனிடின் நகரில் நடந்து வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 431 ரன்களையும், இலங்கை அணி 294 ரன்களையும் எடுத்தது. 3-ம் நாள் ஆட்டத்தின் இறுதியில் நியூஸிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தது. டாம் லதாம் 72 ரன்களுடனும், வில்லியம்சன் 48 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.
நேற்று காலை ஆட்டத்தை தொடர்ந்த லதாம் - வில்லியம்சன் இருவரும் மின்னல் வேகத்தில் ரன்களைக் குவித்தனர். வில்லி யம்சன் 71 ரன்களுக்கு அவுட் ஆக, லதாம் 109 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூஸிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 267 ரன்களை எடுத்திருந்தபோது ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து வெற்றிபெற 405 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் இலங்கை அணி ஆடவந்தது.
இடையிடையே குறுக்கிட்ட மழைக்கு நடுவே 2-வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி நேற்று ஆட்டநேர இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 109 ரன்களை சேர்த்திருந்தது.
இலங்கை அணியில் கருணா ரத்னே 29 ரன்களையும், மென்டிஸ் 46 ரன்களையும் எடுத்தனர். சண்டிமால் 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூஸிலாந்து அணியின் சார்பில் டிம் சவுதி 2 விக்கெட்களையும், வாக்னர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஆட்டத்தின் கடைசி நாளான இன்று இலங்கை அணி வெற்றி பெற இன்னும் 296 ரன்களை எடுக்க வேண்டும். அது கடினம் என்ப தால் இன்று மழையால் ஆட்டம் தடைபடாமல் இருந்தால் நியூஸி லாந்து அணி வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளன.