அசாருதீன், அர்ஜுன் டெண்டுல்கர். 
விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி மோதல்: சச்சின் டெண்டுல்கர் மகன், கேரளப் புயல் அசாருதீனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

மு.அப்துல் முத்தலீஃப்

ஐபிஎல் முதல் போட்டி சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி மோதும் போட்டியாக உள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின் டெண்டுல்கர் மகனும், ஆர்சிபியில் கேரள புயல் அசாருதீனும் களம் இறக்கப்படுவார்களா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் திருவிழா இன்று முதல் ஆரம்பமாகிறது. 2008-ல் ஆரம்பித்த ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு 14-வது சீசனாக ஆரம்பமாகிறது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் தற்போது ஆரம்பமாக உள்ளது.

வியாபார ரீதியிலான கிரிக்கெட் போட்டித் தொடரான ஐபிஎல் இந்தியாவில் பிரபலமான ஒன்று. மற்ற நாடுகளும் இதேபோன்று போட்டிகள் நடத்தினாலும் இந்தியாவில் ஐபிஎல் பிரபலமடைந்த அளவுக்கு வேறு எந்த நாட்டிலும் பிரபலமடையவில்லை.

எந்த அளவுக்கு ஐபிஎல் மற்ற நாட்டு வீரர்களையும் கவர்ந்துள்ளது என்றால் தென் ஆப்ரிக்கா-பாகிஸ்தான் தொடர் நடக்கும்போதே அதன் முன்னணி வீரர்கள் குயிண்டன் டிகாக், லுங்கி இங்கிடி, ரபடா, நாட்ஜே (நோக்கியா) உள்ளிட்டோர் கிளம்பி ஐபிஎல்லுக்கு வந்துவிட்டனர்.

இந்த முறை ஐபில் போட்டி ஏலப் பட்டியலில் பிரபல வீரர் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் வந்தார். ஆனால், அவரை யாரும் ஏலம் எடுக்கவில்லை. விற்பனையாகாத நிலையில் மும்பை இந்தியன்ஸ் மீண்டும் கேட்டு ஏலம் எடுத்தனர். இடது கை மிதவேகப்பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேனான அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று கேரள அணியைச் சேர்ந்த இளம்புயல் அசாருதீன் செய்யது முஸ்தாக் சாம்பியன்ஸ் போட்டியில் மும்பைக்கு எதிராக 37 பந்துகளில் மின்னல் வேக சதம் அடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இந்த ஐபிஎல் ஏலத்தில் அவரை ஆர்சிபி ஏலம் எடுத்தது. ஐபிஎல் ஆட வேண்டும், 4 சதம் ரஞ்சி சீசனில் அடிக்க வேண்டும், 2023 உலகக்கோப்பை போட்டியில் ஆட வேண்டும், சொந்த வீடு, பென்ஸ் கார் வாங்க வேண்டும் என்பதையே தன் லட்சியமாக எழுதி வைத்துள்ளார்.

அதிரடி ஆட்டக்காரர், விக்கெட் கீப்பரான அசாருதீனுக்கும் இது முதல் ஐபிஎல் என்பதால் வாய்ப்பு கிடைக்குமா? என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், 2 மாற்றங்கள் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணியில் செய்யப்பட்டுள்ளது. மார்கர் ஜென்சனும், க்ரிஸ் ஜெயினும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆர்சிபியிலும் அசாருதீனுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. முதல் ஆட்டம் என்பதால் இரு அணிகளும் இளம் வீரர்களை இறக்கவில்லை. இடையில் இருவருக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT