விளையாட்டு

விளையாட்டாய் சில கதைகள்: ஒலிம்பிக் போட்டி தொடங்கிய நாள்

பி.எம்.சுதிர்

உலகில் நாகரிகம் வளர்வதற்கு முன்பே, கிமு 776-ல் சில நாடுகள் பங்கேற்ற ஒலிம்பிக் போட்டிகள் கிரேக்க நாட்டில் நடத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த காலகட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. பின்னர் காலம் செல்லச் செல்ல, இப்போட்டியின் மதிப்பு குறைந்து பின்னர் ஒலிம்பிக் போட்டிகளே நின்று போனது.

இதைத்தொடர்ந்து நவீன யுகத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த கிரேக்க நாட்டினர் 18-ம் நூற்றாண்டு முதல் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இதன் தொடக்கமாக உள்ளூர் இளைஞர்கள் கலந்துகொண்ட போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பைரே டி குபெர்டின் என்பவர், நவீன ஒலிம்பிக் போட்டிக்கான அடிப்படை விதிகளை வகுத்தார். 1892-ம் ஆண்டில் சர்வதேச விளையாட்டு அமைப்புகளிடம், ஒலிம்பிக் போட்டியை மீண்டும் தொடங்குவது பற்றி அவர் விவாதித்தார். இதைத்தொடர்ந்து 1894-ம் ஆண்டில் நடந்த சர்வதேச விளையாட்டு அமைப்புகளின் கூட்டத்தில், ஒலிம்பிக் போட்டியை மீண்டும் தொடங்க முடிவெடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 1896-ம் ஆண்டு, ஏப்ரல் 6-ம் தேதி முதலாவது ஒலிம்பிக் போட்டி ஏதன்ஸ் நகரில் தொடங்கியது. இந்த ஒலிம்பிக் போட்டியில் சைக்கிளிங், கத்திச் சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், நீச்சல், தடகளம், பளுதூக்குதல் மற்றும் மல்யுத்தம் ஆகிய 9 பிரிவுகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்பட்டன. 13 நாடுகளைச் சேர்ந்த 241 வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். முதல் நாளன்று நடந்த டிரிபிள் ஜம்ப் போட்டியில் (மும்முறை தாண்டும் போட்டி) அமெரிக்க தடகள வீரரான ஜேம்ஸ் கோனோளி தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வென்ற வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதைத்தொடர்ந்து நடந்த உயரம் தாண்டும் போட்டியிலும் பங்கேற்ற ஜேம்ஸ் கோனோளி, இதில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

SCROLL FOR NEXT