விளையாட்டு

ஷிகர் தவணிடம் நாம் பொறுமை காக்க வேண்டும்: கோலி

இரா.முத்துக்குமார்

விருத்திமான் சஹாவிடம் அபரிமிதமான திறமைகளைக் காணும் விராட் கோலி தற்போது ஷிகர் தவண் பேட்டிங்கையும் ஆதரிக்கிறார்.

வீரர்கள் எவ்வளவு சொதப்பினாலும் அவர்களை பாதுகாக்கும் கொள்கையில் தோனியின் வழிதோன்றலாகத் திகழும் விராட் கோலி, சஹாவைத் தொடர்ந்து தற்போது ஷிகர் தவணுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் தொடரில் தவணின் சராசரி 25.2, டெஸ்ட் போட்டியில் மொஹாலியில் இரு இன்னிங்ஸ்களிலும் ஸ்கோர் குறிப்பவரை தொந்தரவு செய்யவில்லை. ஆனால் பெங்களூருவில் 45 நாட் அவுட். அவரது முன்னேற்றத்தை மழை தடுத்தது.

இந்நிலையில் சஹாவின் ‘திறமை’களை பாராட்டிய விராட் கோலி, தற்போது ஷிகர் தவணையும் ஆதரித்துள்ளார்.

"3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2 சதங்கள் எடுத்த ஒருவரை தடுமாறுகிறார் என்று நீங்கள் கூறினால் பார்மில் இருப்பது என்றால் என்ன என்று எனக்கு தெரியவில்லை.

காலே டெஸ்ட் போட்டியில் சதமெடுத்தார், முன்னதாக வங்கதேசத்துக்கு எதிராக பதுல்லாவில் சதம் எடுத்தார். அதன் பிறகு அவர் துரதிர்ஷ்டவசமாக காயமடைந்தார். பிறகு மொஹாலியில்தான் ஆடினார். எனவே 2 அல்லது 3 இன்னிங்ஸை வைத்து ஒருவர் மீது கடுமை காட்ட வேண்டாம். இது சர்வதேச கிரிக்கெட்.

ஷிகர் தவண் போன்ற வீர்ர்களிடத்தில் நாம் பொறுமை காப்பது அவசியம், ஏனெனில் அவர் தாக்கம் விளைவிக்கும் வீரர். அவருக்கு நாம் எவ்வளவு நம்பிக்கை அளிக்க முடியுமோ அவ்வளவு நம்பிக்கை அளிக்க வேண்டும். அவர் ஆடத் தொடங்கினால் போட்டிகளை அவர் வெற்றி பெற்று கொடுப்பார். இது உறுதி. அவர் பார்மில் இல்லை என்று நான் கருதவில்லை. அவர் அருமையாகவே பேட் செய்து வருகிறார்.

அவர் தன்னைத் தானே மீண்டும் கண்டுபிடித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். அவர் மீது தேவையற்ற அழுத்தங்களை ஏற்றுதல் கூடாது. அவர் விரைவாக ரன் குவித்து ஆட்டத்தின் போக்கை விரைவில் எதிரணியிடமிருந்து பறித்து விடுபவர். இந்தத் தொடரில் அவர் நிறைய ரன்களை எடுப்பார் என்றே கருதுகிறேன்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

ஷிகர் தவண், ரோஹித் சர்மா போன்ற வீரர்களுக்குக் காட்டும் சலுகை, இளம் வீரர் லோகேஷ் ராகுல் போன்றோருக்குக் காட்டப்படுவதில்லையே என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் விராட் கோலி இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT