ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற ஒரே படகு ஓட்டும் வீரரான தத்து பாபன் பொகானலின் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 5).
1991-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் தத்து. அவரது அப்பா ஒரு விவசாயி. கூடவே கிணறு வெட்டும் வேலைக்கும் சென்றுவந்தார். தத்துவுக்கு 2 தம்பிகள். பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் காலத்திலேயே தன் தந்தையுடன் சேர்ந்து தத்துவும் கிணறு வெட்டும் வேலைக்கும், விவசாய வேலைக்கும் சென்று வந்தார்.
இந்நிலையில் 2011-ம் ஆண்டு அவர்கள் குடும்பத்தில் புயல் வீசியது. தத்துவின் தந்தை திடீரென இறந்தார். அதோடு அவர் வாங்கிய கடன்களும் குடும்பத்தின் கழுத்தை நெரித்தன. அப்பாவின் கடன்களை அடைக்க, வீட்டில் இருந்த டிராக்டரும், சிறிது விவசாய நிலமும் விற்கப்பட்டன. மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தத்து கையைப் பிசைந்துகொண்டிருந்தார். அப்போதுதான் ராணுவத்தில் ஆட்களைச் சேர்ப்பதற்கான முகாம் நடைபெறுவதாக அவருக்கு தகவல் கிடைத்தது. தன் குடும்பத்தின் கஷ்டங்களைத் தீர்க்க ராணுவத்தில் சேர்ந்தார் தத்து.
இந்த நேரத்தில் ராணுவத்தில் இருந்த படகோட்டும் பயிற்சியாளரான இஸ்மாயில் பேக் என்பவரின் பார்வையில் தத்து பட்டார். 6 அடி 4 அங்குல உயரம் கொண்ட தத்துவின் உடல்வாகு, படகோட்டும் போட்டிக்கு ஏற்றதாக இருப்பதாக அவர் கருதினார். இதுபற்றி தத்துவிடம் கூற, அவரோ, “எனக்கு தண்ணீர் என்றாலே பயம். நீச்சல் தெரியாது. அதனால் இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை” என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். ஆனால் இஸ்மாயில் பேக் விடவில்லை. அவருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்து, பின்னர் படகில் ஏற்றினார். சில நாட்களிலேயே படகு ஓட்டும் பிரிவில் வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கினார் தத்து. இன்று தண்ணீர் பயத்தை வென்று இந்தியாவின் முன்னணி படகு ஓட்டும் வீரராக திகழ்கிறார் தத்து.