விளையாட்டு

ஹெய்டன், சைமண்ட்ஸ், புகானன் மீது மைக்கேல் கிளார்க் கடும் சாடல்

இரா.முத்துக்குமார்

ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், தனது சகாக்களான ஹெய்டன் மற்றும் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், முன்னாள் பயிற்சியாளர் ஜான் புகானன் ஆகியோர் மீது கடுமையாக விமர்சனங்களை முன் வைத்தார்.

ஆஷஸ் டயரி 2015-இல் அவர் கூறியிருப்பதாவது: ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் எனது தலைமைத்துவத்தை தொலைக்காட்சி வரை சென்று விமர்சித்துள்ளார். மன்னிக்கவும். அவர் எந்த ஒருவரது தலைமையையும் பற்றி பேச லாயக்கற்றவர். தன் நாட்டுக்காக ஆட மது அருந்திவிட்டு மைதானத்துக்கு வரும் நபர் இவர். இவரெல்லாம் அடுத்தவர் மீது கல்லெறியலாமா?” என்று ஒரு சாத்துமுறை வழங்கினார்.

மைக்கேல் கிளார்க் தனது கரியரின் ஆரம்ப காலத்தில் ஷார்ட் லெக் திசையில் பீல்ட் செய்ய தன்னை பாண்டிங் அழைத்தால் ஆஸ்திரேலியாவுக்கு விளையாடுவதையே விட்டுவிடுவதாக தெரிவித்ததை மேத்யூ ஹெய்டன் குறிப்பிட்டார்.

இது பற்றி கிளார்க் கூறிய போது, “கடந்த 12 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவுக்காக ஆடுவது பற்றிய பெருமிதத்தையும் கவுரவத்தையும் காப்பாற்றி வந்ததை அனைவரும் அறிவர். ரிக்கி பாண்டிங் என்னை துறைமுக பாலத்திலிருந்து குதிக்கச் சொன்னால் குதித்திருப்பேன். ஆஸ்திரேலியாவுக்காக ஆடுவது என்பது எனக்கு அவ்வளவு நேசமானது” என்றார்.

பயிற்சியாளர் புகானனுக்கு கிளார்க் கொஞ்சம் ஓவர் டோஸ் தாக்குதல் கொடுத்தார், பேகி கிரீன் கலாச்சாரம் கிளார்க் தலைமையின் கீழ் சீரழிந்ததாக புகானன் தெரிவித்திருந்ததே கிளார்க்கின் ஓவர் டோஸுக்குக் காரணம்.

"ஜான் புகானனுக்கு பேகி கிரீன் பற்றி என்ன தெரியும்? அவர் ஆஸ்திரேலியாவுக்காக ஆடியுள்ளாரா? அவர் பயிற்சியாளராக இருந்த ஆஸி. அணியை எனது நாய் ஜெர்ரி கூட பயிற்சி செய்து உலக ஆதிக்கத்துக்குக் கொண்டு வரும். பெரிய வீரர்களைக் கொண்ட அணியின் பயிற்சியாளராக இருப்பது ஒன்றும் கடினமல்ல. ஆனால் இதனை ஜான் புகானன் மறந்துவிட்டதாகத் தெரிகிறது” என்றார்.

மேலும் தனது தலைமையில் ஆஸ்திரேலியா சந்தித்த தோல்விகளைக் காரணம் காட்டி விமர்சிப்பது பற்றி கூறும்போது, “இந்த விமர்சனங்களின் மூலம் கடந்த 13 ஆண்டுகளாக நான் மட்டுமே அணியின் பிரச்சினை போல இது தொடுக்கப்படுகிறது.

உள்நாட்டில் உலகக் கோப்பையை வென்றுள்ளோம், உலகின் சிறந்த அணியான தென் ஆப்பிரிக்காவை அவர்கள் மண்ணில் சென்று வீழ்த்தினோம், ஆஷஸ் தொடரை 5-0 என்று கைப்பற்றினோம், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை 5-ம் நிலையிலிருந்து ஒன்றாம் நிலைக்கு உயர்த்தினோம். இத்தகைய சாதனைகளை மறைத்து விமர்சிப்பது வருத்தமளிக்கும் ஒரு செயலாகும்” இவ்வாறு எழுதியுள்ளார் மைக்கேல் கிளார்க்.

SCROLL FOR NEXT