உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் முதலில் சிலி அணியை எதிர்கொள்வதன் பிரச்சனைகளை பிரேசில் பயிற்சியாளர் அலசியுள்ளார்.
பிரேசிலியாவில் இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில் நெய்மாரின் இரட்டைக் கோல்களின் உதவியுடன் கேமரூன் அணியை பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் ஊதியது.
பிரிவு பி-யில் நெதர்லாந்து அணி சிலியை நேற்று 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் சிலி அந்தப் பிரிவில் 2ஆம் இடம் பிடித்தது. நெதர்லாந்து அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று தோற்கடிக்க முடியாத அணி என்ற நிலைக்குச் சென்றுள்ளது.
இந்த நிலையில் நாக் அவுட் சுற்றில் எடுத்த எடுப்பில் சிலி அணியை எதிர்கொள்வது பற்றி பிரேசில் பயிற்சியாளர் ஸ்கொலாரி கூறியதாவது:
நான் சிலி அணிக்கு எதிராக இருமுறை விளையாடியுள்ளேன், அவர்கள் எவ்வளவு கடினமான அணியினர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும், சிலர் நாங்கள் சிலியை எளிதில் வீழ்த்தி விடுவோம் என்று கருதுகின்றனர், ஆனால் சிலி தரமான வீரர்களையுடைய அணி, எந்த அணியை எதிர்த்து விளையாட விருப்பம் என்று என்னைக் கேட்டால் நான் சிலி என்று நிச்சயம் கூறமாட்டேன்.
எங்கள் அணியின் ஆட்டத்த்தில் நாளுக்கு நாள் மெருகு ஏறி வருகிறது. ஆனால் சிலியை வீழ்த்த இன்னும் ஒரு படி முன்னேற்றம் தேவை. சில வேளைகளில் மிகவும் நன்றாக விளையாட வேண்டும் என்று சில தவறுகளைச் செய்து விடுகிறோம், ஆனால் சிலிக்கு எதிராக தவறுகள் நிகழக்கூடாது.
அர்ஜென்டீனா எப்படி லயோனல் மெஸ்ஸியை நம்பியிருக்கிறதோ, அதேபோல் பிரேசில் நெய்மாரை நம்பியிருக்கிறது, நாங்கள் களத்தில் செய்யும் ஒவ்வொன்றிலும் நெய்மாரின் பங்களிப்பு இருக்கிறது.
என்று கூறினார் ஸ்கொலாரி.